பக்கம்:மணி பல்லவம் 1.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

185

வேழம்பரை அலட்சியமாகப் பேசி அனுப்பியிருக்கிறீர்கள், உங்கள் மேல் அவருக்குச் சினம் மூண்டிருக்குமே? உங்கள் வார்த்தையை அவர் எப்படிக் கேட்பார்?”

"மடல் எழுதுகிறேன் என்றோ, மடலைக் கொடுத்து ஓவியனை வெளியே அனுப்பப் போகிறேன் என்றோ நகைவேழம்பரிடம் சொல்லாதே. ஓவியனை நான் அழைத்துவரச் சொன்னதாக மட்டும் சொல்லு; அவர் அனுப்ப மறுக்கமாட்டார். மறுத்தால் நானே நேரில் வருகிறேன்.”

“என்னவோ, அம்மா! நீங்கள் சொல்வதற்காகத்தான் போகிறேன். எனக்கு அவருடைய ஒற்றைக்கண் முகத்தைப் பார்க்கவே பயமாயிருக்கிறது” என்று சொல்லிவிட்டு ஓவியனை அழைத்து வருவதற்காக நகைவேழம்பர் இருந்த பகுதிக்குச் சென்றாள் வசந்தமாலை-நகைவேழம்பர் அந்த மாளிகையின் கீழ்ப்புறத்தில் தோட்டத்துக்குள் அமைந்திருந்த தனிப்பகுதி ஒன்றில் வசித்து வந்தார். தந்தை யாருடைய கப்பல் வாணிகத்தோடு தொடர்புடைய அலுவலர்களைக் கவனிப்பதற்காக அந்தப் பகுதி அமைந்திருந்தது. அந்தப் பகுதியின் ஆட்சி அதிகாரங்கள் எல்லாம் நகைவேழம்பருடைய ஆதிக்கத்துக்கு மட்டுமே உட்பட்டவை.

தான் கூப்பிட்டனுப்பியதற்கு இணங்கி நகைவேழம்பர் ஓவியனை அனுப்புகிறாரா இல்லையா என்பதைத் தெரிந்து கொண்டு விடுவதற்காகவே சுரமஞ்சரி வசந்தமாலையை அனுப்பினாள். தான் சந்தேகப்படுவதுபோல் ஓவியன் கௌரவமான முறையில் சிறைவைக்கப் பட்டிருக்கிறானா என்பதையும் சுரமஞ்சரி இந்த அழைப்பின் மூலமாகத் தெரிந்து கொண்டுவிட எண்ணியிருந்தாள். தவிர, அந்த இரவு நேரத்தில் மருவூர்ப் பாக்கத்திலுள்ள நீலநாக மறவர் படைக்கலச் சாலைக்குப் போய் இளங்குமரனைச் சந்தித்துத் தனது மடலைக் கொடுப்பதற்கு ஓவியன் மணிமார்பன்தான் தகுதியான ஆள் என்று நினைத்தாள் அவள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/186&oldid=1141989" இலிருந்து மீள்விக்கப்பட்டது