பக்கம்:மணி பல்லவம் 1.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

187

சுரமஞ்சரியை எப்போது சந்திக்கப் போகிறோம் என்றே காத்துக் கொண்டிருந்தது போல மனம் விட்டுக் கதறினான் அந்த இளம் ஓவியன். நெஞ்சிலிருந்து குமுறிக் கொண்டு வந்தன அவன் சொற்கள். சூதுவாது, கள்ளங் கபடமறியாத, இனி அறியவும் விரும்பாத அப்பாவி என்பது அவனுடைய பால்வடியும் முகத்திலேயே தெரிந்தது.

சுரமஞ்சரி அவனுக்கு ஆறுதலாகச் சொல்லலானாள். “பயப்படாதீர்கள் ஓவியரே! உங்களுக்கு ஒரு கெடுதலும் வராமல் நான் பார்த்துக் கொள்கிறேன்.”

“கெடுதல் என்று தனியாக ஏதாவது வெளியிலிருந்து இங்கே வரவேண்டுமா? அம்மணீ! போதுமான கெடுதல்கள் இங்கேயே இருக்கின்றன. இந்த ஒற்றைக் கண்ணர் ஒருவர் போதுமே!”

கடைசியில் நெடுநேரம் பேசி ஓவியனை அமைதி கொள்ளச் செய்தபின் இளங்குமரனுக்குத் தான் எழுதிய மடலை அவனிடம் கொடுத்து யாரும் கண்டுவிடாமல் பரம இரகசியமாக அவனை அங்கிருந்து வெளியே அனுப்பினாள் சுரமஞ்சரி.

“நகைவேழம்பர் இவரை வெளியே அனுப்பலாகாதென்று நிபந்தனை சொல்லியிருந்தாரே அம்மா! நீங்களாக இப்படிச் செய்து விட்டீர்களே!” என்று பதறிய தோழிக்கு,

“நிபந்தனை இருக்கட்டும். அதை மீறியதற்காக என்னை அவர் என்ன செய்கிறார் என்றுதான் பார்க்கலாமே!” என்று பரபரப்பில்லாமல் பதில் சொன்னாள் சுரமஞ்சரி.

சுரமஞ்சரியிடம் சென்ற ஓவியன் நெடு நேரமாகியும் திரும்பாததைக் கண்ட நகைவேழம்பருக்குச் சந்தேகம் மூண்டது. அவர் ஓவியன் திரும்பி வருவதை எதிர்பார்த்து தோட்டத்தில் குறுக்கும் நெடுக்குமாக நடைபோட்டுக் கொண்டிருந்தார். நாழிகைகள் ஒன்றன் பின் ஒன்றாய் வளர்ந்தன. அவருடைய கோபமும் வளர்ந்தது. சுரமஞ்சரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/188&oldid=1141992" இலிருந்து மீள்விக்கப்பட்டது