பக்கம்:மணி பல்லவம் 1.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

194

மணிபல்லவம்

“மறுக்கவில்லை மணிமார்பா! இரண்டு நாள் சந்தித்துப் பேசிவிட்டோம் என்ற செருக்கில், ‘நெஞ்சுளம் கொண்ட அன்பருக்கு. அநேக வணக்கங்களுடன் அடியாள் சுரமஞ்சரி எழுதும் மடல். நான் உங்களை மிக விரைவில் சந்திக்க விரும்புகிறேன். கூடுமானால் உடனே சந்திக்க விரும்புகிறேன். இந்தச் சந்திப்பில் என் நலனை விட உங்கள் நலன்தான் அதிகம். உங்களிடம் சில செய்திகளை மனம்விட்டுப் பேசித் தெரிந்து கொள்ள வேண்டும். எங்கே எப்போது நாம் சந்திக்கலாமென்று இந்த மடல் கொண்டு வரும் ஓவியரிடம் அருள் கூர்ந்து சொல்லி அனுப்புங்கள்’ என்று எழுதியிருக்கிறாளே அப்பனே; இவள் கூப்பிட்ட நேரத்துக்குக் கூப்பிட இடத்திலெல்லாம் வந்து சந்திக்க இளங்குமரன் இவளுடைய ஏவலாள் இல்லையே!” என்று சொல்லிக் கொண்டே மணம் நிறைந்த அந்த வெண்தாழை மடலைக் கசக்கி எறியப் போனான் இளங்குமரன். அப்போது அவன் அப்படிச் செய்து விடாமல் ஓவியன் அவனுடைய கைகளைப் பற்றிக் கொண்டு விட்டான்.

“பூக்களைக் கசக்கி எறிவது மங்கலமான செயல் அல்ல, ஐயா! மென்மையான மனம்படைத்தவர்கள் அதை விரும்பமாட்டார்கள்.”

“எனக்கு மென்மையான மனம் இல்லையென்றே வைத்துக்கொள்! அதற்காக நான் வருத்தப்பட மாட்டேன். இந்தா, இதை அவளிடமே திருப்பிக் கொண்டு போய்க் கொடு” என்று தானே கசக்கி எறிவதற்கிருந்த அந்த மடலை மணிமார்பனுடைய கைகளில் திணித்தான் இளங்குமரன். மணிமார்பனின் நிலை தவிப்புக்குரியதாகி விட்டது. என்ன செய்தாலும், எவ்வளவு தெளிவாக எடுத்துச் சொன்னாலும் இளங்குமரனின் மனத்தை நெகிழச் செய்வதற்கு இயலாதென்று தோன்றியது ஓவியனுக்கு. அதைப் பற்றி மறுபேச்சுப் பேசாமல் அவன் திருப்பிக் கொடுத்த மடலை வாங்கிக் கொண்டு பேச்சை வேறு திசையில் திருப்பினான் மணிமார்பன். இளங்குமரன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/195&oldid=1142001" இலிருந்து மீள்விக்கப்பட்டது