பக்கம்:மணி பல்லவம் 1.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

196

மணிபல்லவம்

“ஒருபோதும் அப்படி இருக்காது ஐயா! அந்தப் பெண் உங்கள் மேல் மெய்யாகவே அன்பு செலுத்துகிறாள். தன் தந்தையாரும் நகைவேழம்பரும் உங்களைப் பற்றி அப்படி நடந்து கொள்வது அவளுக்கே பிடிக்கவில்லை. அந்தப் பெண் நிச்சயம் உங்களுக்குத் துரோகம் செய்யமாட்டாள். எப்போதாவது அந்த ஏழடுக்கு மாளிகையிலிருந்து உங்களுக்குப் பேராபத்து வருவதாயிருந்தால் அப்போது உங்களைக் காப்பாற்றுவதற்கு அவள்தான் முன் நிற்பாள். பெண்களின் உள்ளம் அன்பு மயமானது. தங்களால் விரும்பப்படுகிறவர்களுக்கு வஞ்சகமிழைக்க அன்பு இடந்தராது, ஐயா!”

“அப்படி எல்லாப் பெண்களையும் நம்பிவிட முடியாது, அப்பனே! பெண்களின் வஞ்சகத்தால் உலகத்தில் பிறந்த மகாகாவியங்கள் பல.”

“ஆனால் பெண்களின் அன்பினால் பிறந்த மகா காவியங்கள் அவற்றைக் காட்டிலும் பன்மடங்கு அதிகம் ஐயா!”

“அப்படி மகாகாவியங்களைத் தோற்றுவிக்கிற அன்பை அந்த ஏழடுக்கு மாளிகையிலிருந்தும் நாம் எதிர் பார்க்க முடியாது, மணிமார்பா!”

“மாளிகை என்ன செய்யும் ஐயா! மனம் கொண்டது தான் மாளிகை. அன்பின் சக்தி அளப்பரியது. அதற்கு முன் சாதாரண உணர்வுகள் தோற்றுவிடுகின்றன. ஒரு காலத்தில் இதே பெண்ணின் சிரிப்புக்கு நீங்கள் தோற்றுப் போனால் கூட நான் ஆச்சரியப்படமாட்டேன்.”

ஓவியன் மேலே பேசுவதற்குள் பளீரென்று அவன் கன்னத்தில் ஒரு பேயரை விழுந்தது.

“நாவை அடக்கிப் பேசு, அப்பனே! இப்படி இன்னொருவர் பேசியிருந்தால் பல்லை உதிர்த்துக் கையில் கொடுத்திருப்பேன். போய்விடு.. இனி ஒரு கணமும் இங்கே நிற்காதே” என்று கொதிப்போடு கூக்குரலிட்டுக்கொண்டே அந்தக் கணமே மணிமார்பனைப் பிடரியில் கைவைத்துத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/197&oldid=1142003" இலிருந்து மீள்விக்கப்பட்டது