பக்கம்:மணி பல்லவம் 1.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

197

தள்ளி வாயில் வரையில் சென்று துரத்தி விட்டு வந்தான் இளங்குமரன்.

‘பிறரால் எனக்குத் துன்பம் வந்தாலும் பொறுப்பேன், பிறர் என்னால் துன்புற விடமாட்டேன்’ என்று கூறிய அதே மனிதனின் கைகள்தாம் தன்னைக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளின என்பதை ஓலியனால் நம்பவே முடியவில்லை. இளங்குமரன் இவ்வளவு உணர்ச்சி வசப்பட்டு நடந்து கொள்வான் என்று கனவிலும் மணிமார்பன் எதிர்பார்க்கவில்லை.

கசக்கித் திருப்பியளிக்கப்பட்ட தாழை மடலைப் போலவே அவனும் மன வேதனையுடன் கசங்கிய நினைவுகளோடு அந்த அகால நேரத்திலேயே தனியாகப் பட்டினப்பாக்கத்துக்குத் திரும்பினான்.

தான் சுரமஞ்சரியின் மடலைக் கொடுப்பதற்காக மாளிகையிலிருந்து வெளியேறி மருவூர்ப் பாக்கத்துக்கு இளங்குமரனைக் காணச் சென்று திரும்புவது ஒருவருக்கும் தெரியாமல் இருக்க வேண்டுமென்று நினைத்திருந்தான் ஓவியன். ஆனால் அதுவும் அவன் நினைத்தபடி நடக்கவில்லை. நினைத்திருந்ததற்கு நேர்மாறாகவே ஒரு விபரீதம் நடந்தது.


26. கொலைத் தழும்பேறிய கைகள்

யந்துகொண்டே திரும்பி வந்த ஓவியன் பிரதான வாயிலில் துழையும் போது மாளிகை அமைதியாயிருந்தது. சுரமஞ்சரி முன்னேற்பாடாகச் சொல்லி வைத்திருந்ததனாலோ என்னவோ வாயிற் காவலர்கள் எவரும் அவனைத் தடுக்கவில்லை. அவன் திரும்பிவருவதை எதிர்பார்த்துக் காத்திருப்பதற்கு அடையாளமாகச் சுரமஞ்சரியின் மாடத்தில் மட்டும் தீபங்களின் ஒளி தெரிந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/198&oldid=1142004" இலிருந்து மீள்விக்கப்பட்டது