பக்கம்:மணி பல்லவம் 1.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

202

மணிபல்லவம்

துண்டு. கீழே பொதியறைக்குள் இறங்கிப் பார்த்தபோது மெய்யாகவே அவ்விடத்தில் பக்கத்துக்கு ஒன்றாகப் புலிகள் அடைக்கப்பெற்ற இரும்புக் கூண்டுகள் இருந்தன. கொள்ளிபோல் மின்னும் செந்தழற் கண்களுடன் செவ்வரிக் கோலங்காட்டும் வாட்டசாட்டமான வேங்கைப்புலிகள் இரண்டு கூண்டிலும் பசியோடு உலாவிக் கொண்டிருந்தன. அந்த இருளில் அவை பயங்கரமாய்த் தோன்றின.

“பார்த்தாயா?” என்றார் நகைவேழம்பர். ஓவியனுக்கு நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டு விட்டது. பேச வரவில்லை. தீப்பந்தைத் தூக்கிக் காட்டிக் கொண்டே கூறினார் அவர், “அதோ இரண்டு புலிக்கூண்டுக்கும் நடுவே மேல்விட்டச் சுவரில் ஒரு பெரிய இரும்பு வளையம் தொங்குகிறது பார்த்தாயா? அதில் தண்டனைக்குரிய மனிதனைக் கயிற்றில் தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டு மேலே போய் நின்றுகொண்டு இரண்டு புலிக்கூண்டுகளின் கதவிலும் இணைக்கப்பட்டிருக்கும் இரும்புச் சங்கிலியை இழுத்துக் கதவுகளைத் திறந்து விட்டுவிடுவோம். பின்பு புலிகளுக்கு விருந்துக் கொண்டாட்டம்தான். அதோ பார், சுற்றிலும் எத்தனையோ மனிதர்கள் இங்கு அழிந்திருக்கும் சுவடுகள் தெரிகின்றன” என்று தரையில் சுற்றிலும் சிதறிக்கிடந்த எலும்புகளையும் மண்டை ஓடுகளையும் காண்பித்தார் அந்தக் கொடிய மனிதர். மணிமார்பனுக்கு எலும்புக் குருத்துக்களில் நெருப்புக் குழம்பு ஊற்றினாற்போல் உடம்பெங்கும் பயம் சிலிர்த்தது. “உனக்குச் சந்தேகமாயிருந்தால் இதோ பார்! ஆட்களை எப்படித் தலைகீழாய்த் தொங்கவிடுவதென்று காண்பிக்கிறேன்” என்று சொல்லித் தீப்பந்தத்தை அவன் கையில் கொடுத்து விட்டுக் கீழே இறங்கி ஆடையை வரிந்து கட்டிக்கொண்டு மேல் உள்ள இரும்பு வளையத்தில் பாதங்களை நுழைத்துக் கோத்தபடி இரண்டு கணம் தாமே தலைகீழாகத் தொங்கிக் காண்பித்தார் நகை வேழம்பர். அப்போது நரவாடை கண்ட அந்தப் புலிகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/203&oldid=1142010" இலிருந்து மீள்விக்கப்பட்டது