பக்கம்:மணி பல்லவம் 1.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

மணிபல்லவம்

உடனே, “வசந்தமாலை! பத்து நூறாயிரம் பொன் பெறுமானமுள்ள மணிமாலையைப் பரிசு கொடுப்பதற்காக நாம் பெருமைப்படுவது பெரிதில்லையாம். இவர் பெருமைப்படுவதற்கு இதில் இடமிருக்கிறதா என்று சிந்திக்கிறாராம்” என்று அவள் தோழியிடம் கூறுவது போல் அவனுக்குக் கூறிய குறிப்புரையில் கடுமையும் இகழ்ச்சியும் கலந்திருப்பதை அவன் உணர்ந்து கொண்டான். அவன் வதனத்தில் நகைக் குறிப்பு வறண்டது. ஆண்மையின் கம்பீரம் நிலவியது.

“மன்னியுங்கள், அம்மணி! உங்கள் மணிமாலையின் பெறுமானம் பத்து நூறாயிரம் பொன்னாயிருக்கலாம். அதற்கு மேலும் இருக்கலாம்! ஆனால் என்னுடைய வீரத்தின் பெறுமானமாக அதை நீங்கள் கொள்ள வேண்டிய அவசியமில்லை. ‘கொள்’ எனக் கொடுத்தல் உயர்ந்தது. ‘கொள்ளமாட்டேன்’ என்று மறுப்பது அதைவிட உயர்ந்தது என்று பழைய நூல்களில் படித்திருப்பீர்கள். என்னைப்போல் ஆண்மையும் தன்மானமும் உள்ளவர்கள் பிறருடைய கைகளிலிருந்து அவசியமின்றி எதையும் பெற விரும்புவதில்லை, இந்தப் பெரிய நகரத்திலே இலஞ்சி மன்றத்திலும்.[1], உலக அறவியின் வாயிற்புறத்திலும் கூனும், குருடுமாக நொண்டியும், நோயுடம்புமாக ஆற்றலும் வசதியுமில்லாத ஏழையர் எத்துணையோ பேர் பிச்சைப் பாத்திரங்களுடன் ஏங்கிக் கிடக்கிறார்கள். அப்படிக் கொடுப்பதானால் அவர்களுக்கு வாரிக்கொடுத்துப் பெருமையடையுங்கள். வணக்கம், மீண்டும் உங்களுக்கு என் நன்றி, போய் வருகிறேன்” என்று விரைவாக விலகி நடந்தான் இளங்குமரன். அவனைப் பின்பற்றி நடந்த நண்பர்களின் ஏளன நகையொலி அவள் செவியிற் பாய்ந்தது. இளங்குமரனின் கழுத்தில் வெற்றிமாலையாக அசைந்த முல்லைமாலையின் நறுமணம் அவன் விரைவாகத் திரும்பி நடந்த திசையிலிருந்து பல்லக்கினுள்


  1. வரலாற்றுக் காலத்துப் பூம்புகாரில் இருந்த இடங்கள்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/21&oldid=1141586" இலிருந்து மீள்விக்கப்பட்டது