பக்கம்:மணி பல்லவம் 1.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

210

மணிபல்லவம்

நுழைகிற வாயிலை மறித்துக் கொண்டாற்போல் அப்படியே நின்றார் அவர். தேரிலிருந்து இறங்கி முன்னால் வந்த பெண் அரசகுமாரி போல் பேரழகுடன் தோன்றினாள். உடன் வந்தவள் அவள் தோழியாக இருக்கலாமென்று அவர் புரிந்து கொள்ள முடிந்தது.

சிலம்பொலி குலுங்க, அன்னம்போல் பின்னிப் பின்னி நடந்துவரும் மென்னடை, சூடிய பூக்களும், பூசிய சந்தனமும் அவர்களிடமிருந்து காற்றில் பரப்பிய நறுமணம் இவற்றால் சற்றும் கவரப்படாமல் கற்சிலை போல் அசையாமல் நிமிர்ந்து கம்பீரமாக நின்றார் நீலநாக மறவர். அவரருகில் வந்ததும் அவர்கள் இருவரும் தயங்கி நின்றார்கள். இரண்டு பெண்களும் தங்களுக்குள் ஒருவரையொருவர் மருண்டு பார்த்துக் கொண்டார்கள். நீலநாக மறவர் அவர்களை நோக்கிக் கேட்டார்;

“நீங்கள் இருவரும் யார்? இங்கே என்ன காரியமாக வந்தீர்கள்? இது படைக்கலச் சாலை. ஆண்களும், ஆண்மையும் வளருமிடம். இங்கே உங்களுக்கு ஒரு காரியமும் இருக்க முடியாதே?”

“இங்கே இளங்குமரன் என்று ஒருவர் இருக்கிறாரே; அவரை அவசரமாக நாங்கள் பார்க்க வேண்டும்” என்று அவருக்குப் பதில் கூறினாள் முன்னால் நடந்து வந்த பெண். நீலநாக மறவருடைய முகபாவம் மாறியது.

“இளங்குமரனை உங்களுக்குத் தெரியுமா, பெண்களே?”

“நன்றாகத் தெரியும்.”

“எப்படிப் பழக்கமோ?”

“எங்களை அவருக்கு நன்றாகத் தெரியும். இன்று பகலில் பட்டினப்பாக்கத்திலிருக்கும் எங்கள் மாளிகைக்குக்கூட அவர் வந்திருந்தார்.”

“எதற்காக வந்திருந்தான்?”

அவர்களிடமிருந்து பதில் இல்லை. நீலநாக மறவருடைய கடுமையான முகத்தில் மேலும் கடுமை கூடியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/211&oldid=1142020" இலிருந்து மீள்விக்கப்பட்டது