பக்கம்:மணி பல்லவம் 1.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

21

காற்றோடு கலந்து வந்து பரந்தது. ஆனால் அந்த மணத்தினால் அவளுடைய கோபத்தையும் ஏமாற்றத்தையும் ஆற்ற முடியவில்லை. பல்லக்குத் தூக்கி நிற்பவர்களுக்கும், தோழிக்கும் முன்னிலையில் தன்னை எடுத்தெறிந்து பேசிவிட்டுப் போன அவன் செல்லும் திசை நோக்கி அவள் கண்கள் சீற்றத்தைப் புலப்படுத்தின. அவள் தன் கைவிரல்களை மணிமாலையோடு சேர்த்துச் சொடுக்கினாள். அவளுடைய பவழமெல் உதடுகள் ஒன்றையொன்று மெல்லக் கவ்வின.

வேகமாக நடந்த இளங்குமரன் சற்றே நின்று கேட்க முடிந்திருந்தால் அந்தப் பல்லக்கு அங்கிருந்து நகர்ந்தபோது, “வசந்தமாலை! இவனை அழகன் என்று மட்டும் நினைத்தேன்; முரடனாகவும் திமிர் பிடித்தவனாகவும் அல்லவா இருக்கிறான்?” என்று சீறி ஒலித்த செல்வ மகளின் கோபக் குரலைத் தானும் செவிமடுத்திருப்பான். ஆனால் அந்தச் சீற்றக் குரலில் சீற்றமே முழுமையாக இருந்ததா? இல்லை! கவனித்தால் சீற்றமும் சீற்றமற்ற இன்னும் ஏதோ ஒருணர்வும் கலந்து இருந்தது புலப்பட்டது.


2. சக்கரவாளக் கோட்டம்

ராப்போது நடு யாமத்தைத் தொட்டுக் கொண்டிருந்தது. இந்திரவிழாவின் ஆரவாரங்கள் பூம்புகாரின் புறநகர்ப் பகுதிகளில் அதிகமாக இல்லை. புற நகரில் சக்கரவாளக் கோட்டத்தை அடுத்திருந்த சம்பாபதி வனம் இருண்டு கிடந்தது. நிலா ஒளியின் ஆற்றல் அந்த கண்டம் வனத்தில் தன் ஆதிக்கத்தைப் படர விட முடியாது. அடர்ந்து நெருங்கிய மரங்களும் செடி கொடிகளும் பின்னிப் பிணைந்து நெடுந்தொலைவுக்குப் பரந்து கிடந்தது சம்பாபதி வனம். அந்த வனத்தில் மற்றோர் புறம் காவிரிப் பூம்பட்டினத்து மயானமும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/22&oldid=1141587" இலிருந்து மீள்விக்கப்பட்டது