பக்கம்:மணி பல்லவம் 1.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

223

பலரால் மதிக்கப்படுவதாலும் உலக வாழ்க்கையில் பெருமையாக இருப்பதைப் போல் நேற்று இருந்த ஒருவரை இன்றில்லாமல் செய்துவிடுவது காலத்துக்குப் பெருமை. காலத்தின் இந்தப் பெருமையால் நமக்குத் துக்கம். தன்னுடைய ஆற்றலால் காலம் தான் இந்த விதமான துக்கங்களையும் மாற்ற வேண்டும். அழுது புலம்பிக் கொண்டிராமல் இறந்தவருக்குச் செய்ய வேண்டிய நீத்தார் கடன்களைச் செய்யப் புறப்படு” என்று நீலநாக மறவர் ஆறுதல் கூறினார். சற்றுமுன் தன்னைக் கடுமையாகக் கோபித்துக் கொண்டவர்தானா இப்போது இப்படி ஆறுதல் கூறுகிறார் என்று வியப்பாயிருந்தது இளங்குமரனுக்கு. பெரிய துக்கத்தில் மனிதர்களுக்கு இடையே உள்ள சிறிய கோபதாபங்கள் கரைந்து விடுகின்றன. கலங்கிய கண்களோடு தன்மேல் சாய்ந்து கொண்டே தன் முகத்தை நிமிர்ந்து பார்த்த இளங்குமரனின் தலையைக் கோதிக்கொண்டே, “அருட்செல்வ முனிவர் எப்படி உனக்கு நிழல்மரமாக இருந்தாரோ, அப்படி இனிமேல் நான் இருப்பேன். நீ தவறாக நடந்து கொள்வதாகத் தெரிகிறபோது நான் கடிந்து கொண்டால் அதை நீ ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். ஒரு தந்தைக்குத் தன் மகனைக் கடிந்து கொண்டு நல்வழிப்படுத்த உரிமை உண்டு அல்லவா?” என்று பாசத்தோடு கூறினார் நீலநாக மறவர்.

“உலகத்துக்கெல்லாம் பொழுது விடிந்து கொண்டிருக்கிற இந்த நேரத்தில் எனக்கு மட்டும் இப்படி ஒரே படியாக இருண்டு விட்டதே” என்று நீலநாக மறவரின் தோளில் முகத்தைப் புதைத்துக் கொண்டு இளங்குமரன் துன்பத்தை ஆற்ற முடியாமல் மேலும் பொங்கிப் பொங்கி அழலானான். கதக்கண்ணன் முதலிய நண்பர்களும் கண்களில் நீர் மல்க அருகில் வந்து நின்றார்கள்.

“நினைத்து நினைத்து வேதனைப்படாதே, தம்பீ! மனத்தை ஆற்றிக்கொள். துன்பங்களைப் பொறுத்துக் கொள்ளத் தெரியாதவர்களுக்குத்தான் பகலும் இரவு போல் இருண்டு தோன்றும். நீ வீரன். அப்படி உனக்குத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/224&oldid=1142034" இலிருந்து மீள்விக்கப்பட்டது