பக்கம்:மணி பல்லவம் 1.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

232

மணிபல்லவம்

‘பெண்ணுக்கு நாணமும், அந்த நாணத்துக்கு ஓர் அழகும் இருப்பதற்குக் காரணமே அவளுடைய மனத்துக்கு மட்டுமே சொந்தமான சில மெல்லிய நினைவுகள் வாய்ப்பது தானே? அந்த நினைவுகளை எல்லாரிடமும் எப்படிப் பங்கிட்டுக் கொள்ள முடியும்?’ இதை நினைத்த போது சுரமஞ்சரி தனக்குத்தானே புன்னகை புரிந்து கொண்டாள்.

சிறிது நேர மௌனத்துக்குப் பின் இருந்தாற் போலிருந்து தனக்கு அருகில் கீழே தரையில் படுத்திருந்த வசந்தமாலையிடம் ஒரு கேள்வி கேட்டாள் சுரமஞ்சரி.

“ஏனடி வசந்தமாலை! செல்வத்தைச் சேர்ப்பதும் சேர்த்து ஆள்வதும், பெருமைக்கும் கர்வப்படுவதற்கும் உரிய காரியமானால், செல்வத்தையே அலட்சியம் செய்கிற தீரன் அதைவிட அதிகமாகப் பெருமையும் கர்வமும் கொண்டாடலாம் அல்லவா?”

“இப்போது திடீரென்று இந்தச் சந்தேகம் உங்களுக்கு எப்படி முளைத்தது அம்மா?”

“சந்தேகத்துக்காகக் கேட்கவில்லையடி; அப்படிப் பெருமை கொண்டாடுகிற ஒருவரை எனக்குத் தெரியும், இப்போது அவர் நினைவு வந்தது. அதனால்தான் கேட்டேன்.”

இவ்வாறு சொல்லிச் சுரமஞ்சரி சிரித்தபோது வசந்த மாலையும் எதையோ புரிந்து கொண்டவள் போல் தலைவியோடு சேர்ந்து சிரித்தாள்.

அப்போது தான் இருந்த மஞ்சத்துக்கு எதிரே சாளரத்தின் வழியே விண் மீன்களும், சந்திரனும் திகழும் வானத்தைக் கண்டாள் சுரமஞ்சரி.

விண்மீன்கள் சாதாரண ஆண் பிள்ளையாகவும், சந்திரன் பேராண்மையாளனாகிய இளங்குமரனாகவும் மாறி அவள் கண்களுக்குத் தோன்றினார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/233&oldid=1142048" இலிருந்து மீள்விக்கப்பட்டது