பக்கம்:மணி பல்லவம் 1.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


31. இருள் மயங்கும் வேளையில்

காலம்தான் எவ்வளவு வேகமாக ஓடுகிறது. மாபெரும் காவிரிப்பூம்பட்டின நகரத்தின் தோற்றத்துக்கே புதிய மகிழ்ச்சியையும் கொண்டாட்டமான ஆரவாரங்களையும் அளித்துக் கொண்டிருந்த இந்திர விழாவின் நாட்களில் இன்னும் ஒன்றே ஒன்றுதான் எஞ்சியிருந்தது. இருபத்தேழு நாட்கள் இருபத்தேழு வினாடிகள்போல் வேகமாகக் கழிந்துவிட்டன. நாளைக்கு எஞ்சியிருக்கும் ஒரு நாளும் முடிந்துவிட்டால் மறுபடியும் இந்திரவிழாவின் இனிய நாட்களை நுகரப் பன்னிரண்டு மாதங்கள் காத்திருக்க வேண்டும். வெறும் நாளிலேயே திருநாள் கொண்டாடுவது போலிருக்கும் அந்த நகரம். திருநாள் கொண்டாடும் போது இன்னும் சிறப்பாக இருக்கும். விழா முடிந்த மறு நாளிலிருந்து நாளங்காடியின் கடைகள், பட்டினப் பாக்கத்தில் செல்வ வளமிக்க வீதிகள், மருவூர்ப் பாக்கத்தின் நெருக்கமான பகுதிகள் ஆகிய எல்லா இடங்களிலும் இந்திர விழாவின் புதுமை. ஆரவாரங்களெல்லாம் குறைந்து, வழக்கமான ஆரவாரங்களோடு அமைதி பெற்றுவிடும்.

இந்திர விழாவின் இறுதிநாள் சிறப்பு வாய்ந்தது. அன்றுதான் காவேரியின் நீராடு. துறைகளில் சிறந்ததும், நகரத்திலேயே இயற்கையழகுமிக்க பகுதியுமாகிய கழார்ப் பெருந்துறையில் பூம்புகார் மக்கள் நீராட்டு விழாக் கொண்டாடுவது வழக்கம். காவிரிப் பூம்பட்டினத்தின் மேற்குப் பகுதியில் காவிரி. அகன்றும் ஆழ்ந்தும் பாயும் ஓரிடத்தில் கழார்ப் பெருந்துறை என்னும் நீராடு துறை அமைந்திருந்தது. நீராட்டு விழாவுக்கு முதல் நாள் மாலையிலேயே நகரமக்கள் காவிரிக் கரையிலுள்ள பொழில்களிலும், பெருமரச் சோலைகளிலும் போய்த்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/234&oldid=1149502" இலிருந்து மீள்விக்கப்பட்டது