பக்கம்:மணி பல்லவம் 1.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

243

“அந்தப் பெண்கள் இருவரும் இந்தப் பக்கமாக வந்ததை என் கண்களால் நானே பார்த்துவிட்ட பின் நீங்கள் சொல்கிற பொய்யை மெய்யாக எப்படி ஐயா நான் நம்ப முடியும்?”

இளங்குமரனின் இந்தக் கேள்வியைக் கேட்டதுமே படர்ந்து முதிர்ந்த தமது முகத்தில் குறும்பும் விஷமத்தனமும் பரவச் சிரித்தார் சுரமஞ்சரியின் தந்தை. அருகிலிருந்த நகைவேழம்பரும் அதே போலச் சிரித்தார்.

“நான் சொல்வதை நீ நம்ப வேண்டாம். ஆனால் மறுபடியும் உன் கண்களால் நீயே பார்த்தால் நம்புவாயல்லவா?” என்று சொல்லிக் கொண்டே பக்கத்து ஆலமரத்தை நோக்கித் திரும்பிக் கைதட்டி, “மகளே, இப்படி வா” என்று இரைந்து கூப்பிட்டார் அவர். அடுத்த கணம் பருத்த ஆலமரத்தின் அடிமரத்து மறைவிலிருந்து இளங்குமரன் கண் காணச் சுரமஞ்சரி மெல்லத் தலையை நீட்டினாள். அவள் பக்கத்தில் உடன் வந்த தோழிப் பெண்ணும் இருளில் அரைகுறையாகத் தென்பட்டாள் இளங்குமரன் அதைக் கூர்ந்து நோக்கிவிட்டு அவர் பக்கம் திரும்பிக் கேட்கலானான்.

“நன்றாகப் பாருங்கள். அதோ ஆலமரத்தடியில் சுரமஞ்சரியும் அவள் தோழியும் தானே நிற்கிறார்கள்? சுரமஞ்சரி இங்கு வரவில்லை என்று நீங்கள் கூறியது பொய்தானே? ஏன் ஐயா இப்படி முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கப் பார்க்கிறீர்கள்?”

இப்படிக் கேட்ட இளங்குமரனுக்குப் பதில் ஒன்றும் கூறாமல் அவன் முகத்தையே இமையாமல் பார்த்தார் சுரமஞ்சரியின் தந்தை.

“எதற்கும் இன்னொருமுறை நன்றாகப் பார்த்துவிட்டுச் சொல்லுங்களேன்” என்று கூறியவாறே இளங்குமரனுக்குப் பக்கத்தில் வந்து நின்று கொண்டு ஒற்றைக் கண்ணரும் அவன், பொறுமையைச் சோதிக்கவே, இவனுக்குக் குழப்பக்தோடு கோபமும் மூண்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/244&oldid=1142059" இலிருந்து மீள்விக்கப்பட்டது