பக்கம்:மணி பல்லவம் 1.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

மணிபல்லவம்

அன்னையே! உன்னுடைய பாதங்களைத் தொட்டு வணங்கும் பேறு இந்தக் காளைப் பருவத்திலிருந்தாவது எனக்குக் கிடைக்கவிருக்கிறதே! இன்று என் வாழ்வில் ஒரு பொன்னாள்’ என்று பெருமை பொங்க நினைத்தவனாக விரைந்து கொண்டிருந்தான் இளங்குமரன். தாயும் தந்தையும் எவரென்று தெரியாமல் சக்கரவாளக் கோட்டத்துத் தவச் சாலையிலுள்ள முனிவரொருவரால் வளர்த்து ஆளாக்கப்பட்டவன் அவன்; வயது வந்தபின் அவன் தன் பெற்றோர் பற்றி நினைவு வரும்போது எல்லாம் ஏதேதோ சொல்லி ஆவலை வளர்த்திருந்தார் அந்த முனிவர், சித்திரா பௌர்ணமியன்று காட்டுவதாகச் சொல்லி மூன்றுமுறை இந்திரவிழாக்களில் அவனை ஏமாற்றிவிட்டிருந்தார் அவர். எத்தனைக்கெத்தனை தைரியசாலியாகவும் அழகனாகவும் வளர்ந்திருந்தானோ, அத்தனைக்கத்தனை தன் பிறப்பைப் பற்றி அறிந்து கொள்ளத் தவிக்கும் தணியாத் தாகம் அவனுள் வளர்ந்து கொண்டிருந்தது. அதில் மிகப் பெரிய மர்மங்களும் அதியற்புதச் செய்திகளும் இருக்க வேண்டும்போல் ஓர் அநுமானம் அவனுள் தானாகவே முறுகி வளரும்படி செய்திருந்தார் அந்த முனிவர்.

அன்று இரவு நடு யாமத்திற்கு மேல் சம்பாபதி கோவிலின் பின்புறமுள்ள நாவல் மரத்தின் கீழ் அவனைப் பெற்ற தாயையும் அவனையும் எவ்வாறேனும் சந்திக்க வைத்து விடுவதாக முனிவர் உறுதி கூறியிருந்தார்.

‘ஆகா! அதோ நாவல் மரத்தடி வந்துவிட்டது. மரத்தடியில் யாரோ போர்த்திக் கொண்டு அடக்கமாக அமர்ந்திருக்கிறார் போலவும் தெரிகிறது. பக்கத்தில் சிறிது விலகினாற்போல் நிற்பது யார்? வேறு யாராயிருக்கும்? முனிவர்தான்! என் அருமை அன்னையை அழைத்து வந்து அமர வைத்துக் கொண்டு என்னை எதிர்பார்த்து ஆர்வத்தோடு நிற்கிறார் போலும்! நான்தான் வீணாக நேரமாக்கி விட்டேன். இன்னும் சிறிது போது முன்னாலேயே வந்திருக்கலாமே!’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/25&oldid=1141591" இலிருந்து மீள்விக்கப்பட்டது