பக்கம்:மணி பல்லவம் 1.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

250

மணிபல்லவம்

எவர்களிடம் இருக்க முடியுமென்று பார்க்கிறேன்” என்று குமுறியபடி பதில் வந்தது இளங்குமரனிடமிருந்து. கதக்கண்ணனுக்கு இவையெல்லாம் புதிய பேச்சுக்களாயிருந்தன. எதை விளங்கிக் கொண்டு எப்படி மறுமொழி கூறுவதென்றும் அவனுக்குத் தெரியவில்லை; ஆகவே அவன் மௌனமாக இளங்குமரனைப் பின் தொடர்ந்தான். அவர்கள் உலக அறவிக்கு அப்பாலிருந்த சக்கர வாளத்தையும், சம்பாபதி கோவிலையும் கடந்து மேலே சென்றார்கள்.

“என் தந்தையும், முல்லையும் நம் வரவை எதிர்பார்த்து அங்கே கழார்ப் பெருந்துறையில் காத்துக் கொண்டிருப்பார்கள். நாம் விரைவாகச் செல்வது நல்லது” என்று நடுவில் ஒருமுறை இளங்குமரனை அவசரப் படுத்தினான் கதக்கண்ணன்.

பூம்புகார் வீதிகளில் மீண்டும். அவர்கள் குதிரைப் பயணம் தொடர்ந்தது. ‘இலஞ்சிமன்றம்’ என்னும் பெரிய ஏரியின் கரையருகே வந்ததும், இளங்குமரன் மீண்டும் குதிரையை நிறுத்திக் கீழே இறங்கினான். அந்தக் குளத்தின் கரையிலுள்ள அம்பலத்தின் மேடைகளிலும், திண்ணைகளிலும் காவிரிப் பூம்பட்டினத்தின் அநாதை நோயாளிகள் நிறைந்து கிடந்தார்கள். மண்ணின் மேல் மனிதர்களுக்கு எத்தனை வகை கொடிய நோய்கள் எல்லாம் வர முடியுமோ, அத்தனை வகை நோய்களும் வந்த நோயாளிகள் இலஞ்சி மன்றத்தில் இருந்தார்கள். தூக்கம் வராமல் அலறித் தவிக்கும் நோயாளி, தூக்கமிழந்து வலியினால் துடிக்கும் நோயாளி, தொழு நோயாளி, புழு நோயாளி, நொண்டி, கூன் குருடு, இன்னும் சொல்லில் அடங்காத நோயாளிகளையெல்லாம் சேர்த்துப் பார்க்க முடிந்த இடம் இலஞ்சிமன்றம். அழுகை ஒலி, வேதனைக் குரல், அலறல், அரற்றல் நிறைந்த அந்தக் குளக்கரையில் நின்று சிந்தித்தபோது இளங்குமரனுக்கு உலகமே இருண்டு தோன்றியது. உலகமே நோய்மயமாகத் தோன்றியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/251&oldid=1142066" இலிருந்து மீள்விக்கப்பட்டது