பக்கம்:மணி பல்லவம் 1.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

25

இவ்வாறு உணர்வு மயமான எண்ணங்களோடு மரத்தடியை நெருங்கிய இளங்குமரன், “சுவாமி! என் அன்னையை அழைத்து வந்துவிட்டீர்களா? இன்று நான் பெற்ற பேறே பேறு” என்று அன்பு பொங்கக் கூறியவாறே முனிவரின் மறுமொழியையும் எதிர்பார்க்காமல் அமர்ந்திருந்த அன்னையுருவை வணங்கும் நோக்குடன் நெடுஞ்சாண் கிடையாக மண்ணில் வீழ்ந்தான். ‘அம்மா’ என்று குழைந்தது அவன் குரல்.

அம்மாவின் பதில் இல்லை! ஆசி மொழி கூறும் அன்னையின் பாசம் நிறைந்த குரலும் ஒலிக்கவில்லை! மெல்லச் சந்தேகம் எழுந்தது இளங்குமரனின் மனத்தில். ‘அன்னையைக் காணும் ஆர்வத்தில் இருளில் யாரென்று தெரியாமலே வீழ்ந்து வணங்கிக் கொண்டிருக்கிறோமோ!’ என்று மருண்டு விரைவாக எழுந்திருக்க நிமிர்ந்தான்.

இரண்டு வலிமை வாய்ந்த கைகள் அவனுடைய தோள் பட்டைகளை அமுக்கி மேலே எழ முடியாமல் செய்தன. வேறு இரு கைகள் கால் பக்கம் உதற முடியாமல் தன்னைக் கட்ட முயல்வதையும் அவன் உணர்ந்து கொண்டான்.

அன்னையைக் காணும் ஆர்வத்தில் ஏமாந்து தப்புக் கணக்குப் போட்டு விட்டோம் என்று தீர்மானமாக உணர்ந்து எச்சரிக்கை பெற்ற அவள் துள்ளி எழுந்து திமிர முயன்றான். நாவல் மரத்தில் ஆந்தை அலறியது. மரத்தைப் புகலடைந்திருந்த ஏதோ சில பறவைகள் இருளில் ஓசையெழுமாறு சிறகடித்துப் பறந்தன.


3. கதக்கண்ணன் வஞ்சினம்

உயிர்க்குணங்களுள் ஏதேனும் ஒன்று மிகுந்து தோன்றும்போது மற்றவை அடங்கி நின்றுவிடும் என்று முனிவர் தனக்கு அடிக்கடிக் கூறும் தத்துவ வாக்கியத்தை அந்தப் பயங்கரமான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/26&oldid=1141622" இலிருந்து மீள்விக்கப்பட்டது