பக்கம்:மணி பல்லவம் 1.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

261

வேகமாக நீந்தியும் கூட விரைந்தோடும் நீரின் ஓட்டம் அவளை இன்னும் கிழக்கே இழுத்துச் சென்று கொண்டிருந்தது.

கடலும் காவிரியும் கலக்குமிடம் நெருங்க நெருங்க ஆழமும் அலைகளும் அதிகமாயிற்றே என்று தயங்கினாலும் இளங்குமரன் தன் முயற்சியை நிறுத்திவிடவில்லை.

‘பூம்புகார்போல் பெரிய நகரத்தில் மனிதர்கள் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்வதற்கே வாய்ப்புக் குறைவு. அப்படியிருந்தும், அரிதாக ஏற்பட்ட ஓர் உதவியைச் செய்யாமல் கைவிடலாகாது’ என்பதுதான் அப்போது இளங்குமரனின் நினைப்பாக இருந்தது. முகம் தெரியாத அந்தப் பெண்ணைக் காப்பாற்றிக் கரை சேர்த்து அவளுடைய பெற்றோரிடம் ஒப்படைக்கும் போது அவர்கள் அடையும் மகிழ்ச்சியைக் கற்பனை செய்து கொண்டே, பாய்ந்து நீந்தினான் அவன். நகரத்து மக்களெல்லாம் மகிழ்ச்சியோடு நீராட்டு விழா முடிந்து திரும்பும்போது, பெண் காவேரியில் மூழ்கி மாண்டதற்காக அழுது புலம்பும் பெற்றோருடைய ஓலம் ஒன்றும் காவிரிக் கரையில் இருந்து ஒலிக்கக்கூடாது என்பதுதான் அவன் ஆசை.

இதோ அந்த ஆசையும் நிறைவேறி விட்டது. அருகில் நெருங்கி அவளுடைய கூந்தலை எட்டிப் பிடித்து விட்டான் இளங்குமரன். அவளுடைய கூந்தல் மிகப் பெரிதாக இருந்ததனால் அவளை இழுத்துப் பற்றிக் கொள்ள இளங்குமரனுக்கு வசதியாயிருந்தது. தன் உடலோடு இன்னோர் உடலின் கனமும் சேரவே நீந்த விடாமல் நீரோட்டம் அவனை இழுத்தது. மேகக் காடுபோல் படர்ந்த நறுமணத் தைலம் மணக்கும் அந்தப் பெண்ணின் கூந்தல் அவளுடைய முகத்தை மறைத்ததோடன்றி அவனுடைய கண்களிலும் வாயிலும் சரிந்து விழுந்து தொல்லை கொடுத்தது. எதிரே பார்த்து நீந்திப் பயனில்லை. நீரோட்டத்தை எதிர்த்து மேற்குப் பக்கம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/262&oldid=1142079" இலிருந்து மீள்விக்கப்பட்டது