பக்கம்:மணி பல்லவம் 1.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

263

விடவில்லை. படகும் அவன் பிடித்த சுமை தாங்காமல் ஒரு பக்கமாகச் சாய்ந்தது. அரை நாழிகை நேரம் படகோடும் நீரோட்டத்தோடும் போராடி முயன்று எப்படியோ தன்னையும், அந்தப் பெண்ணையும் படகுக்குள் ஏற்றிக் கொண்டான் இளங்குமரன். படகுக்குள் ஏற்றிக்கொள்ள மட்டும்தான் அவனால் முடிந்ததே ஒழியக் கடலைநோக்கி ஓடும் படகை எதிர்த் திசையில் காவிரித் துறையை நோக்கி மறித்துச் செலுத்த முடியவில்லை. அப்போதிருந்த காற்றிலும், மழையிலும், நீர்ப்பிரவாகத்தின் அசுர வேகத்திலும் அப்படி எதிர்ப்புறம் படகைச் செலுத்துவது முடியாத காரியமாக இருந்தது. காவிரி கடலோடு கலக்கும் சங்கமுகத்தை நோக்கி வெறிகொண்ட வேகத்தில் இழுத்துக் கொண்டு போயிற்று அந்தப் படகு. படகு சென்ற வேகத்தினாலும், அலைகளின் அசைப்பினாலும் உள்ளே கிடத்தியிருந்த பெண்ணின் தலை படகின் குறுக்கு மரச் சட்டத்தில் மோதி இடிக்கலாயிற்று. இளங்குமரனின் உள்ளம் இதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் வருந்தியது. அந்தப் பெண்ணின் தலையை மெல்லத் தூக்கித் தன் மேலங்கியைக் கழற்றி மடித்து அவள் தலைக்கு அணைவாக வைத்தான். அவள் தலை மோதி இடிப்பது நின்றது.

பெருமழை பெய்யவே மழைநீர் படகில் சிறிது சிறிதாகத் தேங்கலாயிற்று. மிகச் சிறிய அந்தப் படகில் இருவர் சுமையுடன் நீரும் தேங்குவது எவ்வளவு பயப்படத்தக்க நிலை என்பதை எண்ணியபோது இளங்குமரன் தனக்கிருந்த சிறிதளவு நம்பிக்கையையும் இழக்கத் தொடங்கினான். மனம் உறுதி குன்றியது.

காவிரி கடலோடு கலக்குமிடம் நெருங்க நெருங்கப் படகின் ஆட்டம் அதிகமாயிற்று. அலைகளும் சுழிப்புக்களும் படகை மேலும் கீழும் ஆட்டி அலைத்தன. படகினுள்ளே தேங்கிய நீரை முடிந்தவரை அப்புறப்படுத்த முயன்று மேலும் மேலும் நீர் சேர்ந்து கொண்டிருந்ததும், புயலில் உதிர்ந்த அரசிலையாகப் படகு அலைபட்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/264&oldid=1142081" இலிருந்து மீள்விக்கப்பட்டது