பக்கம்:மணி பல்லவம் 1.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

265

நெருக்கமாகச் செழித்து வளர்ந்து தோன்றும் அந்தத் தீவுக் குன்றம் நீலக் கடலின் இடையே மரகதப் பச்சை மலை போல் அழகாய்த் தெரியும். சங்கமுகத்திலோ, அதற்கு அருகிலுள்ள பகுதிகளிலோ நின்று கடலுள் பார்த்தால் நன்றாகத் தெரியக்கூடிய அந்தத் தீவும் மழைமூட்டத்தினால் இன்று தெரியவில்லை. காவிரியிலும் கடற் பரப்பினுள்ளும் இவ்வாறு அமைந்திருந்த நிலத் திடல்களுக்குத் ‘துருத்தி’ என்று பெயரிட்டிருந்தார்கள். இத்தகைய தண் மணல் துருத்திகளும், தாம்பூந்துறைகளும், நீர்ப்பரப்பைச் சூழ்ந்த பெரிய பெரிய சோலைகளுக்கு நடுவே அமைக்கப்பட்ட ‘படப்பை’ என்னும் வேனிற் காலத்து வீடுகளும் காவிரிப் பூம்பட்டினத்தைச் சுற்றி மிகுதியாக இருந்தன. அவற்றில் ஏதாவது ஒன்றின் அருகேயாவது தன் படகு ஒதுங்காதா என்று எண்ணித் தவித்தான் இளங்குமரன். படகு நெடுங்கடலுக்குள் சென்றுவிட்டபின் இப்படி எண்ணித் தவிப்பதற்கும் வழியில்லாமற் போயிற்று.

‘இனிமேலும் நாம் தப்பி உயிர்பிழைக்க... வழியிருக்கிறது’ என்று அவன் இறுதியாக நம்பிக் கொண்டிருந்த ஒரே இடம் ‘கப்பல் கரப்பு’ என்னும் தீவுத்திடல்தான், கடற்கரையோரங்களில் வசிக்கும் பரதவர்களும், துறை முகத்துக்கு வந்து போகும் கப்பல்களின் மீகாமகர்களும் ஒரு காரணத்துக்காக அந்தத் தீவைக் ‘கப்பல் கரப்பு’ என்று அழைத்தார்கள்.

காவிரிப்பூம் பட்டினத்திலிருந்து புறப்பட்டுச் செல்கிற கப்பல்களைக் கரையிலிருந்து பார்க்க முடிந்த கடைசி எல்லை அந்தத் தீவுதான். அதற்குப் பின் தீவின் தோற்றமே கப்பல்களைக் கண் பார்வைக்குத் தென்படாமல் மறைத்து விடும். அதுபோல வெளிநாடுகளிலிருந்து காவிரிப்பூம் பட்டினத்துக்குள் நுழையும் கப்பல்களும் கப்பல் கரப்புத் தீவுக்கு இப்பால் புகுந்ததும் அந்தப் பக்கத்திலிருந்து காண்பவர்களுக்குத் தோற்றம் மறைந்துவிடும். அப்படிக் கப்பல்கள் கண்பார்வைக்கு மறையக் காரணமாயிருந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/266&oldid=1142083" இலிருந்து மீள்விக்கப்பட்டது