பக்கம்:மணி பல்லவம் 1.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

266

மணிபல்லவம்

தீவு ஆகையினால் தான் கப்பல் கரப்பு என்று அழைக்கப்பட்டு வந்தது அந்தத் தீவு.

நடுக்கடலில் தன் போக்காக விழுந்து மிதக்கும் மரகத மணியாரம் போன்ற அந்தத் தீவின் ஓரமாக ஏதாவதொரு பகுதியில் படகு ஒதுங்க வேண்டும் என்பதுதான் இளங் குமரனின் சித்தத்தில் அப்போதிருந்த ஒரே ஆசை. மழையும் புயலுமாயிருந்த அந்தச் சமயத்தில் கப்பல் கரப்பினருகே ஒதுங்கினால் மற்றொரு பயனும் கிடைக்கும். துறைமுகத்துக்கு வரும் கப்பல்களும், துறைமுகத்திலிருந்து போகும் கப்பல்களும், கப்பல் கரப்பை ஒட்டியே செல்வதனால், தீவிலிருந்து மீண்டும் நகர் திரும்ப எந்தக் கப்பலிலாவது சொல்லி உதவியை நாடலாம் என்று நினைத்திருந்தான் இளங்குமரன்.

அருட்செல்வ முனிவரின் மறைவு பற்றிய வேதனையையும் படைக்கலச் சாலையின் தனிமையையும் மறந்து காவிரித்துறை நீராட்டு விழாவில் ஆரவாரத்தில் கலந்து திரியலாம் என்றுதான் கதக்கண்ணனோடு வந்திருந்தான் அவன். ஆனால் நினைத்தபடி நடக்கவில்லை. நினையாதவையெல்லாம் நடந்துவிட்டன, ‘எந்தப் பெண் தண்ணீரில் மூழ்கினால் எனக்கென்ன வந்தது? அது அவளுடைய தலையெழுத்து’ என்று கதக்கண்ணன் நினைத்ததைப் போலவே தானும் நினைக்க முடிந்திருந்தால் இளங்குமரனுக்கு இந்தத் துன்பங்களெல்லாம் ஏற்பட்டிருக்கப் போவதில்லை. என்ன செய்வது? மனிதர்களை நினைத்தால் அவனுக்கு இரக்கமாயிருக்கிறது; அவர்களுடைய குணங்களைப் புரிந்து கொண்டால் கோபம் வருகிறது. முதன்முதலாக ஓவியன் மணிமார்பனுக்கு உதவ நேர்ந்ததை நினைத்துக் கொண்டான் அவன். பிறருக்காகத் துன்பப்படுகிறவர்கள் தங்களுக்காகவும் சேர்த்துத் துன்பப்பட வேண்டியிருக்கிறதென்பதை இளங்குமரன் பல அனுபவங்களால் விளங்கிக் கொண்டிருந்தாலும், பிறருக்கு உதவப் போனதன் காரணமாகத் தனக்கு வம்பிழுத்து விட்டுக் கொள்ளும் சம்பவங்களே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/267&oldid=1142085" இலிருந்து மீள்விக்கப்பட்டது