பக்கம்:மணி பல்லவம் 1.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

268

மணிபல்லவம்

நீராட்டு விழாவுக்கு வர நேர்ந்திருக்க வேண்டும். என்னுடைய ஒவ்வொரு நாளும், நிகழ்ச்சிகளும், திட்டமும் தொடர்பில்லாமல் கழிவதாக நான் நினைப்பதுதான் பிரமை. தொடர்பில்லாமல் தோன்றும் ஏதோ ஒரு தொடர்பு திட்டமிட்டுத்தான் எல்லாம் செய்கிறது போலும்’ என்று நினைந்து மனத்தைத் தேற்றிக் கொண்டு கப்பல் கரப்புத் திடலின் கரை தென்படுகிறதா என்பதை ஆவலோடு கவனிக்கலானான் இளங்குமரன். கரை தெரியவில்லை. ஆனால் கரையை நெருங்கும் அறிகுறிகள் தெரிந்தன. கடல் அலைகளில் அழுகின தென்னை மட்டைகளும், சிறுசிறு குரும்பைகளும், வேறு பல இலை தழைகளும் மிதந்து வந்தன. இந்த அடையாளங்களைக் கண்டு அவன் முகம் சிறிது மலர்ந்தது. கப்பல் கரப்பில் இறங்கி அந்தப் பெண்ணின் மயக்கத்தைத் தெளியச் செய்து அவளையும் அழைத்துக் கொண்டு அவ்வழியாகத் துறைமுகத்துக்குச் செல்லும் கப்பல் ஒன்றில் இடம்பிடித்து நகருக்குள் சென்றுவிடலாம் என்று அவன் தீர்மானம் செய்து கொண்டான். நகருக்குள் சென்று அந்தப் பெண்ணை அவள் இல்லத்திற்குக் கொண்டு போய்ச் சேர்த்த பின் நேரே புறவீதியை அடைந்து கதக்கண்ணனையும், முல்லையையும், அவர்கள் தந்தையையும் சந்திக்கலாமென எண்ணிக் கொண்டிருந்தான் அவன். நீராட்டு விழா விலிருந்து மழையினால் கலைந்து போய்க் கதக்கண்ணன் முதலியவர்கள் வீடு திரும்பியிருப்பார்களென்று அவன் அநுமானம் செய்து கொண்டிருந்ததனால் அவர்களைப் புறவீதியிலேயே தான் திரும்பிச் சென்று சந்திக்கலாமென்பது அவன் தீர்மானமாயிருந்தது.

சிறிது தொலைவு சென்றபின் ‘கப்பல் கரப்புத் தீவு’ மங்கலாகத் தெரிந்தது. காற்றில் அங்குள்ள தென்னை மரங்கள் பேயாட்டமே ஆடிக்கொண்டிருந்தன. அந்தத் தீவின் கரையைக் கண்டதும்தான் சம்பாபதித் தெய்வம் தன்னைக் காப்பாற்றி விட்டதென்று நம்பிக்கை இளங்குமரனுக்கு ஏற்பட்டது. படகிலிருந்து இறங்கிக் கரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/269&oldid=1142087" இலிருந்து மீள்விக்கப்பட்டது