பக்கம்:மணி பல்லவம் 1.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

270

மணிபல்லவம்

வந்தன, போயின. ஆனால் ஆதரவு தேடிக் கூக்குரலிட்ட அவனைத்தான் அவை கவனிக்கவில்லை. வெகுநேரத் துக்குப் பின்பு, ‘இனியும் கப்பல்களை நம்பிக் காத்திருப்பதில் பயனில்லை’ என்ற முடிவுடன் அந்தப் பெண்ணை விட்டு வந்த இடத்துக்குத் திரும்பினான் இளங்குமரன். மழை மூட்டப் பொய்யிருளோடு மெய்யிருளாகிய இரவின் கருமையும் கலந்த தீவினுள் ஒளி மங்கி அந்தகாரம் கவிந்து கொள்ள முற்பட்டிருந்தது. ‘இன்னும் சிறிது நேரத்தில் நன்றாக இருட்டிவிடுமே’ என்ற கவலையோடு திரும்பி வந்த இளங்குமரன் அங்கே அந்தப் பெண் தானாகவே மயக்கம் தெளிந்து எழுந்து நின்று கொண்டிருப்பதைப் பார்த்து வியந்தான். அவளுடைய நிலை அவன் கவலையை ஓரளவு குறைத்தது. அவன் அருகில் வந்த போதும் அவள் அவனைக் கவனிக்கவில்லை. எதிர்ப் பக்கமாகக் கடலைப் பார்த்தவாறு கூந்தலை அள்ளி முடித்துக் கொண்டிருந்தாள் அவள்.

நீரில் நனைந்து வெளுத்திருந்ததனால் வெண் தாமரைப் பூப் போன்ற அவளுடைய சிறிய பாதங்களில் செம்பஞ்சுக் குழம்பு தீட்டினாற்போல் தீவின் ஈரச் செம்மண் நிறம் பூசி அலங்காரம் செய்திருந்தது. தெப்பமாக நனைந்த நிலையில் குளிரில் உதறும் மணிப்புறாவைப் போல் அவள் பொன்னுடல் நடுங்கிக் கொண்டிருந்தது. வெண் சங்குபோல் நளினமாகத் தோன்றிய அவள் கழுத்துப் பின்புறம் பிடரியில் முத்து முத்தாக நீர்த்துளிகள் உருண்டு ஒட்டியும் ஒட்டாமலும் சிதறின. அவை முத்தாரம் போல் தோன்றின. இளங்குமரன் மெல்லிய குரலில் அவளிடம் கூறினான்:

“பெண்ணே! உன்னைக் காப்பாற்றியதற்காகப் பெருமைப்பட்டுக் கொண்டிருப்பவனை நீ சிறிது திரும்பிப் பார்க்கலாமே...”

தோகை பொலியத் தோற்றமளிக்கும் பெண் மயில் போல் அவள் திரும்பினாள்; அவள் முகத்தில் நகை மலர்ந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/271&oldid=1142090" இலிருந்து மீள்விக்கப்பட்டது