பக்கம்:மணி பல்லவம் 1.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

271

அந்த முகத்தைப் பார்த்து இளங்குமரன் அதிர்ந்து போய் நின்றான். அவன் முகத்தில் வெறுப்பும் கடுமையும் பரவின.

“நீயா?... உன்னையா நான் இவ்வளவு சிரமப்பட்டுக் காப்பாற்றினேன்?”

“ஏன்? நான் காப்பாற்றுவதற்குத் தகுதியுடையவளில்லையா?” என்று கேட்டாள் சுரமஞ்சரி. அவள் முகத்திலும், கண்களிலும், இதழ்களிலும் குறும்புச் சிரிப்புக் குலவித் தெரிந்தது. அவளுடைய இன்ப விழிகள் இரண்டும் அவனை விழுங்கி விடுவது போல் பார்த்தன.


37. கருணை பிறந்தது!

ப்பல் கரப்புத் தீவு இருளில் மூழ்கி விட்டது. மழையும் காற்றும் முன்பிருந்த கடுமை குறைந்திருந்தன. பகைவர்களைப் போல் ஒன்றும் பேசிக் கொள்ளாமல் இருளில் எதிரெதிரே உட்கார்ந்து கொண்டிருந்தார்கள் சுரமஞ்சரியும் இளங்குமரனும். கடல் இருந்த இடம் தெரியாவிட்டாலும் கப்பல்கள் போவதும் வருவதுமாக இருந்ததனால் தொலைவில் ஒளிப் புள்ளிகள் தெரிந்தன.

நடுங்கும் குளிர். இருவர் உடலிலும் ஈர உடைகள். இருவர் வயிற்றிலும் பசி, இருவர் மனத்திலும் எண்ணங்கள். இருவர் எண்ணங்களிலும் துயரங்கள், அமைதியில்லை; உள்ளும் இல்லை - புறத்திலும் இல்லை. நீண்ட நேர மௌனத்துக்குப் பின் சுரமஞ்சரியின் கேள்வி இளங்குமரனை நோக்கி ஒலித்தது:

“என்னைக் காப்பாற்றியதை நீங்கள் விரும்பவில்லைதானே?”

“...”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/272&oldid=1142091" இலிருந்து மீள்விக்கப்பட்டது