பக்கம்:மணி பல்லவம் 1.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

274

மணிபல்லவம்

அவள் இப்படிச் சிரித்துக் கொண்டே கேட்டபோது மறுபடியும் இளங்குமரனின் குரல் சினத்தோடு சீறி ஒலித்தது.

“அந்த வெற்றி உனக்குக் கிடைக்குமென்று நீ கனவிலும் நினைக்காதே பெண்ணே! உன் தந்தையார் சேர்த்துக் குவித்திருக்கிற செல்வத்துக்கு ஆசைப்பட்டுச் சோழநாட்டு இளவரசனே உன்னை மணந்து கொள்ள முன்வந்தாலும் வரலாம். ஆனால் இளங்குமரன் வர மாட்டான். உன் தந்தையார் பொன்னையும் மணியையும் தான் செல்வமாகச் சேர்த்திருக்கிறார். ஆனால் இளங்குமரன் தன்மானத்தையும், செருக்கையுமே செல்வமாகச் சேர்த்திருக்கிறான் என்பதைத் தெரிந்து கொள்.”

எதிரே தள்ளி நின்றிருந்த சுரமஞ்சரி இளங்குமரனுக்கு மிக அருகில் வந்தாள். அழுகையும், சிரிப்புமின்றி உறுதியான எண்ணம் மட்டுமே வெளிப்படும் குரலில் ஏதோ சபதம் போடுவதுபோல் அவனிடம் கூறலானாள்.

“ஐயா! இந்த இருளும், மழையும், காற்றும், கடலும் சாட்சியாக உங்களுக்குச் சொல்கிறேன். தன்மானத்தையும், செருக்கையும் உங்களைவிடக் குறைவாக நான் சேர்க்கவில்லை. உங்களிலும் பல மடங்கு அதிகமாகச் சேர்த்திருந்தேன். அதை அழித்து என் மனத்தைப் பலமில்லாமல் நெகிழ்ந்து போகச் செய்தது யார் தெரியுமா?”

“யார்...?”

“கேள்வியைப் பார்! சொல்லித்தான் தெரிந்து கொள்ள வேண்டுமா? நீங்கள்தான்!... நீங்களே தான்.”

“நான் என்னுடைய தன்மானத்தையும், செருக்கையும் வளர்ப்பதற்கு முயல்வது உண்டே தவிரப் பிறருடைய தன்மானமும் செருக்கும் அழிவதற்கு முயன்றதாக எனக்கு நினைவில்லையே?”

“எப்படி நினைவிருக்கும்? உங்கள் செருக்கு வளரும் போதே என் செருக்கு. அழிந்து உங்களுக்கு உரமாகிக் கொண்டிருக்கிறதே? பூ அழிந்துதானே கனி?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/275&oldid=1142095" இலிருந்து மீள்விக்கப்பட்டது