பக்கம்:மணி பல்லவம் 1.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

275

இளங்குமரன் திகைத்துப் போனான். அவளுடைய சாமர்த்தியமான பேச்சில் அவனது உணர்வுகளின் இறுக்கம் சிறிது சிறிதாக உடைந்து கொண்டிருந்தது.

“சோழ இளவரசன் மட்டுமில்லை. அகில உலகிலுமுள்ள எல்லா இளவரசர்களும் வந்தாலும் என் மனத்தைத் தோற்க விடமாட்டேன். என் தந்தையாரின் செல்வம் எனக்குத் தூசியைப் போலத்தான், பதவி, குடிப் பெருமை எல்லாம் அப்படியே! ஆனால் நான் என் மனம் அழிந்து ஏங்கி நிற்கும் நிலை ஒன்று உண்டு. அது இப்போது என் எதிரில் நின்று கொண்டிருப்பவரின் அழகிய கண்களுக்கு முன் தோன்றும் நிலைதான்.”

உணர்வு மயமாகிவிட்ட அவளுக்கு என்ன பதில் சொல்வதென்று தோன்றாமல் தயங்கி நின்றான் இளங்குமரன். கப்பல் கரப்புத் தீவில் எங்கோ புதரில் மலர்ந்து கொண்டிருந்த தாழம்பூ மணம் காற்றில் கலந்து வந்து அவன் நாசியை நிறைத்தது. இந்த மணத்தைத்தான் அன்றொருநாள் கைகளிலிருந்தும் மனத்திலிருந்தும் கழுவித் தீர்த்திருந்தான் அவன். இன்று அதே மணம் மிக அருகில் கமழ்கிறது.

கீழே குனிந்து அவன் பாதங்களைத் தன் பூவிரல்களால் தீண்டி வணங்க முயன்றாள் சுரமஞ்சரி. இளங்குமரன் தன் பாதங்களைப் பின்னுக்கு இழுத்து விலகிக் கொண்டான். அவன் இழுத்துக் கொண்ட வேகத்தையும் முந்திக் கொண்டு வந்து பாதத்தில் அவளுடைய கண்ணீர் முத்து ஒன்று சிந்திவிட்டது. அவள் ஏமாற்றத்தோடு எழுந்தாள்.

“நீங்கள் என்னைக் கடுமையாகச் சோதிக்கிறீர்கள்.”

“தெய்வம் எனக்கு என் தாயைக் காண்பிக்காமல் இதைவிடக் கடுமையாகச் சோதிக்கிறது பெண்ணே?” எனக் கூறிக்கொண்டே மரத்தடியில் உட்கார்ந்தான் இளங்குமரன். அவள் நின்று கொண்டேயிருந்தாள். இருவருக்குமிடையே அமைதி நிலவியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/276&oldid=1142097" இலிருந்து மீள்விக்கப்பட்டது