பக்கம்:மணி பல்லவம் 1.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

276

மணிபல்லவம்

சிறிது நாழிகையில் சோர்வு மிகவே அப்படியே ஈரத் தரையில் சாய்ந்து படுத்துக் கொண்டுவிட்டான் இளங்குமரன். அவள் மட்டும் முன்போலவே நின்று கொண்டிருந்தாள்.

“ஏன் நின்று கொண்டேயிருக்கிறாய்?”

“நிற்காமல் வேறென்ன செய்வது?”

“விடிவதற்குமுன் ஒன்றும் செய்வதற்கில்லை! விடிந்த பின் ஏதாவது கப்பலில் இடம் பிடித்து ஊர் திரும்பலாம்! அதுவரை இப்படியே நிற்கப் போகிறாயா?”

அவன் தலைப்பக்கத்தில் வந்து அவள் மெல்ல உட்கார்ந்து கொண்டாள். அந்த உரிமையும், நெருக்கமும் சற்று மிகையாகத் தோன்றின அவனுக்கு. “அதோ அந்த மரத்தடியில் போய்ப் படுத்துத் தூங்கு” என்று பக்கத்திலிருந்த வேறொரு மரத்தைக் காண்பித்தான் இளங்குமரன்.

“அங்கே போகமாட்டேன். பயமாயிருக்கும் எனக்கு.”

“பயப்படுவதற்கு இந்தத் தீவில் ஒன்றுமில்லை.”

“நீங்கள் இருக்கிறீர்களே” என்று குறும்புத்தனமாகச் சொல்லிச் சிரிக்க நினைத்தாள் சுரமஞ்சரி. ஆனால் அப்படிச் சொல்லவில்லை. பயத்தினால் நாவே சொல்லுக்குத் தடையாகிவிட்டது. '

“பயப்படுவதற்கு ஒன்றுமில்லை என்பதே எனக்கு ஒரு பயமாகிவிடும். ஈரத் தரையில் தலைக்கு ஒன்றும் வைத்துக் கொள்ளாமல் படுத்துத் தூங்கிப் பழக்கமில்லை எனக்கு. நான் இப்படியே நிற்கிறேன் என்று மறுபடியும் எழுந்திருக்கப் போனவளைக் கைப்பற்றி உட்காரவைத்தான் இளங்குமரன். அவன் கைத் தன் கையைத் தீண்டிய அந்த விநாடி, அவள் நெஞ்சில் பூக்கள் பூத்தன. மணங்கள் மணந்தன. மென்மைகள் புரிந்தன. தன்மைகள் நிறைந்தன.

“இதோ இப்படி இதன் மேல் தலை வைத்து உறங்கு” என்று தன் வலது தோளைக் காட்டினான் இளங்குமரன். சுரமஞ்சரி முதல் முதலாக அவனுக்கு முன் நாணித் தலை கவிழ்ந்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/277&oldid=1142099" இலிருந்து மீள்விக்கப்பட்டது