பக்கம்:மணி பல்லவம் 1.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

281

பார்த்தால் பூம்புகாரின் அக நகரும், புறநகரும், கடலுக்குள் கண்ணுக்கெட்டிய தொலைவுவரை உள்ள காட்சிகளும் தெரியும். பெரிதும் சிறிதுமான கப்பல்களும் காட்சியளிக்கும். துறைமுகத்தில் வந்து இறங்கும் வெளிநாட்டு மக்கள் ஏறிப் பார்ப்பதற்காகவே அமைந்திருந்த மாட மாளிகையாகையால் அது பார்வை மாடம் என்று அழைக்கப்பட்டு வந்தது. பார்வை மாடத்தில் ஏறி நின்று பார்த்த இளங்குமரனுக்கு முதல் நாள் மழையில் நனைந்திருந்த நகரும், சுற்றுப் புறங்களும் அற்புதமாய்த் தோன்றின. எல்லையற்ற பெருநீர்ப் பரப்பினிடையே குளிர்ந்த வைகறைப் போதில் பனித்துளி புலராது தலை தூக்கி மலர்ந்து கொண்டிருக்கும் பெரும் பூவைப்போல் மழையில் நனைந்திருந்த நகரத்தில் பகல் பிறந்து விரிந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்தபோது இளங்குமரன் மனத்தில் விசித்திரமானதோர் ஆவல் அரும்பியது. அப்போதே நகரத்தின் ஒவ்வொரு பகுதியிலும் கால் போகும் போக்கில் நடந்து சுற்றிவிட்டு வரவேண்டும் போலிருந்தது அவனுக்கு. இப்படிப் பல சமயங்களில், மழையிலும் வெயிலிலும் காரணமும் நோக்கமுமின்றி அநுபவத்தைத் தேடும் அனுபவத்திற்காக ஊர் சுற்றியிருக்கிறான் அவன். கப்பலிலிருந்து இறங்கி வந்த போது புறவீதியில் வளநாடுடையார் வீட்டுக்குச் சென்று சிறிது நேரம் தங்கியபின் அங்கிருந்து நேரே படைக்கலச் சாலைக்குப் போய்விட வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருந்த அவன் இப்போது அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டான். உற்சாகத்தோடு ஊர்சுற்றிப் பார்க்கப் புறப்பட்டான். ஒவ்வோர் இடமாகப் பார்த்து விட்டுப் பௌத்தப் பள்ளியும் புத்தர் பெருமானுக்குரிய ஏழு பெரிய விகாரங்களும் அமைந்திருந்த இடமாகிய ‘இந்திரவிகாரம்’ என்னும் பகுதிக்கு வந்து சேர்ந்திருந்தான் அவன். தூபிகளோடு கூடிய வெண்ணிற விமானங்கள் ஏழும் தோட்டத்துக்கு நடுவே தூய்மையின் வடிவங்களாகத் தோன்றின. புத்த விகாரங்களுக்கு முன்னால் அங்கங்கே சிறுசிறு கூட்டங்களுக்கு நடுவே நின்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/282&oldid=1142106" இலிருந்து மீள்விக்கப்பட்டது