பக்கம்:மணி பல்லவம் 1.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

284

மணிபல்லவம்

விடும் என்று கதை அளந்து பாமரர்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறீர்கள். இப்போது சொல்லுங்கள். இவர்களுடைய இருண்ட வாழ்க்கையில் புத்த ஞாயிறு தோன்றிப் புத்தொளி பரப்பாதது ஏன்?” இவர்களுடைய குழிந்த வயிறுகளில் சோறு குவியாதது ஏன்? ஒளியிழந்த கண்களில் ஒளி தோன்றாதது ஏன்?” என்று ஆவேசம் கொண்டவன்போல் உணர்வு மயமாக மாறி அவரைக் கேட்டான் இளங்குமரன். அவர் அவன் முகத்தைக் கூர்ந்து நோக்கினார். பதில் கூறாமல் மெல்லச் சிரித்தைக் கூர்ந்து நோக்கினார். பதில் கூறாமல் மெல்லச் சிரித்தார். தம்மையும் அவனையும் சுற்றிக் கூடியிருந்த கூட்டத்தை நன்றாக நிமிர்ந்து பார்த்தார்.

சிறிது நேரம் ஏதோ சிந்திப்பவர்போல் அமைதியாக நின்றார். பின்பு இளங்குமரனை நோக்கிக் கூறலானார்:

“தம்பி! உன் கேள்விகள் மிக அழகாக இருக்கின்றன. சார்வாக மதத்தைச் சேர்ந்தவர்களுக்குத்தான் இவ்வளவு அழகாகப் பேச வரும். அவர்கள் தாம் இப்படிப் பொருளற்ற கேள்விகளைக்கூட அழகான சொற்களால் கேட்பார்கள். இறைவன் என ஒருவன் இல்லை என்பார்கள். நல்வினை தீவினைகளின் விளைவை ஒப்புக் கொள்ளமாட்டார்கள். தங்கள் இன்ப துன்பங்களுக்குத் தங்களுடைய வினைகளே காரணமென்று புரிந்து கொள் ளாமல் இறைவனே காரணமென்று மயங்கி அவனைப் பழிப்பார்கள்.”

“அடிகளே! நான் யாரையும் எதற்காகவும் பழிக்கவில்லை, இவர்கள் இப்படி வாழ நேர்ந்ததன் காரணத்தைத் தெரிந்துகொள்ள மட்டுமே ஆசைப்படுகிறேன்” என்றான் இளங்குமரன்.

“நல்லது! அதைத் தெரிந்து கொள்வதற்கு நீயும், நானும் சிறிது நேரம் விரிவாகப்பேசி வாதமிட வேண்டும். இதோ இங்கே என்னையும், உன்னையும் சுற்றிக் கூடியிருக்கும் காவிரிப்பூம்பட்டினத்துப் பொதுமக்கள் சாட்சியாக உன்னைக் கேட்கிறேன். சமயவாதம் புரிகிற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/285&oldid=1142110" இலிருந்து மீள்விக்கப்பட்டது