பக்கம்:மணி பல்லவம் 1.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

இருவரும் ஒத்த அறிவுடையவராக இருக்க வேண்டியது நியாயம். என்னோடு சமயவாதம் புரிவதற்கு நீ கல்வியினால் தகுதி உடையவனா என்று முதலில் நான் தெரிந்து கொண்டு விடுவது நல்லது. நீ எந்தெந்த நூல்களைக் கற்றிருக்கிறாய் என்று சொல் பார்க்கலாம்.”

“வில்வித்தை, யானையேற்றம், குதிரையேற்றம், வாட் போர்...” என்று சில பெயர்களை வரிசையாக அடுக்கினான் இளங்குமரன்.

துறவியும், கூடியிருந்தவர்களும் கொல்லென்று சிரித்துக் கைகொட்டி ஏளனம் செய்தார்கள்.

“தம்பீ! உன்னுடைய வாட்டசாட்டமான உடம்பையும் முரட்டுத் தோற்றத்தையும் பார்த்தாலே நீ பெரிய வீரன் என்பது தெரிகிறது. ஆனால், நான் இப்போது கேட்கும் கேள்வி உன் உடம்பின் வளர்ச்சியைப் பற்றி அன்று; மனத்தின் வளர்ச்சியைப் பற்றித்தான் கேட்கிறேன். மனம் வளர்வதற்காக நீ என்னென்ன நூல்களைக் கற்றிருக்கிறாய், சமயங்களையும் தத்துவங்களையும் பற்றி என்னென்ன தெரிந்து கொண்டிருக்கிறாய்? என்னென்ன புரிந்து கொண்டிருக்கிறாய்!” என்று நிமிர்ந்து நின்று கை நீட்டி, வினாவும் அந்தத் துறவிக்கு முன் இளங்குமரனின் தலை தாழ்ந்தது. வாழ்க்கையிலேயே முதல் முறையாக உடலின் பலத்தால் எதிர்க்க முடியாத ஓர் எதிரிக்கு முன் தாழ்ந்து தளர்ந்து போய்த் தலை குனிந்து நின்றான் அவன்.

என்ன பதிலை அவருக்குக் கூறுவதென்று அவனுக்குத் தெரியவில்லை. சர்வநாடியும் ஒடுங்கித் தளர்ந்து போர் தொடங்குமுன்பே எதிரிக்குத் தோற்றுப் போய் நிற்கும் பேதைபோல் நிற்பதைத் தவிர வேறொன்றும் செய்யத் தெரியவில்லை அவனுக்கு.

“புத்தமதத்தைப் பற்றியாகிலும் உனக்கு ஏதாவது தெரியுமா?”

‘உங்களைப் போன்ற மொட்டைத் தலைச் சாமியார்கள் அந்த மதத்தில் நிறைய இருக்கிறார்கள் என்பது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/286&oldid=1142111" இலிருந்து மீள்விக்கப்பட்டது