பக்கம்:மணி பல்லவம் 1.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

288

மணிபல்லவம்

கிறேன். இயலாதவர்களுக்கு உதவுவதில் இன்பம் கண்டிருக்கிறேன்.

‘இருக்கலாம்! ஆனால், நம்மால் பிறரிடம் கருணைகாட்ட முடியும் என்ற ஆணவ நினைப்புத்தான் உன்னுடைய கருணைக்குக் காரணம். ‘இரக்கப்பட முடியும்’ என்ற பெருமைக்காகவே இரக்கப்படுகிறவன் நீ! கருணைக்காகவே கருணை செலுத்தவும் இரக்கத்துக்காகவே இரங்கவும், உனக்குத் தெரியாதுதானே?’

இப்படி அவன் மனத்துக்குள்ளேயே அவனைப் பற்றி வாதப் பிரதிவாத நினைவுகள் எழுந்தன. தன்னைப் பற்றிய நினைவுகளைத் தானே தனக்குள் எண்ணி மெய்யின் ஒளியைத் தேட முயன்று தவிக்கும் ஆத்மாநுபவத் தூண்டு தலை அவன் அடைந்தான். அந்தத் தூண்டுதல் ஏற்பட ஏற்பட மனத்தின் கனங்களெல்லாம் குறைந்து மனமே மென்மையானதொரு பூவாகிவிட்டது போலிருந்தது அவனுக்கு. தன் மனத்தின் குறிக்கோள் இப்போது புதிய திசையில் திரும்புவதையும் அவன் உணர்ந்தான்.

பதினெட்டு வயதில் இளமையின் நுழைவாயிலில் அவன் மனத்தில் ஏற்பட்டு அறிய ஆசைப்பசிகள் இரண்டு. ஒன்று உடம்பை வலிமையாகவும் வனப்பாகவும் வைத்துக் கொண்டு எல்லாருடைய கவனத்தையும் கவர வேண்டும்மென்பது. மற்றொன்று விற்போரும், மற்போரும் போன்ற படைக்கலப் பயிற்சிகளில் எல்லாம் தேறித்தேர்ந்த வீரனாக விளங்க வேண்டுமென்பது.

இந்த இரண்டு ஆசைகளும் நிறைவேறி மறந்து போன பின், தன்னுடைய தாய் யார் தந்தை யார், தனக்கு உறவினர்கள் யார் என்று அறியும் ஆசை எழுந்தது. நிறைவேறாத அந்த ஆசையில் நைந்து அது இறுதியில் தாயை மட்டுமாவது காணும் விருப்பமாகக் குறைந்தது. அருட்செல்வ முனிவரின் மறைவுக்குப் பின் அந்த ஆசையும் நிறைவேறும் வழியின்றித் தவிப்பாக மாறி மனத்திலேயே தங்கிவிட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/289&oldid=1142116" இலிருந்து மீள்விக்கப்பட்டது