பக்கம்:மணி பல்லவம் 1.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

29

பதில் இல்லை. எதிரி தன்னைக் காட்டிலும் முதியவன் என்பதும் வன்மை முதிர்ந்தவன் என்பதும் அவனுடைய வைரம் பாய்ந்த இரும்புக் கரங்களை எதிர்த்துத் தாக்கும். போதெல்லாம் இளங்குமரனுக்கு விளங்கியது. ஏற்கெனவே மாலையில் கடற்கரையில் மற்போரிட்டுக் களைத்திருந்த அவன் உடல் இப்போது சோர்ந்து தளர்ந்து கொண்டே வந்தது. இவ்வாறு அவன் கை தளர்ந்து கொண்டு வந்த நேரத்தில் கண்ணில் விழுந்த மண்ணைத் துடைத்து விழிகளைக் கசக்கிக் கொண்டு தெளிவு பெற்றவனாக இரண்டாவது எதிரியும் வந்து சேர்ந்து விட்டான். இளங்குமரனின் மனவுறுதி மெல்லத் துவண்டது. ‘இவர்களென்ன மனிதர்களா, அரக்கர்களா? எனக்குத் தளர்ச்சி பெருகப் பெருக இவர்கள் சிறிதும் தளராமல் தாக்குகிறார்களே!’ என்று மனத்துக்குள் வியந்து திகைத்தான் இளங்குமரன், அவன் நெஞ்சமும் உடலும் பொறுமை இழந்தன, எதிர்த்துத் தாக்குவதை நிறுத்திவிட்டு உரத்த குரலில் அவர்களிடம் கேட்கலானான்:

“தயவு செய்து நிறுத்துங்கள்! நீங்கள் யார்? எதற்காக இப்படி என்னை வழிமறித்துத் தாக்குகிறீர்கள்? நான் உங்களுக்கு என்ன கெடுதல் செய்தேன்? முனிவர் அருட்செல்வர் இன்று இந்நேரத்தில் இங்கு என் அன்னையை அழைத்து வந்து காட்டுவதாகக் கூறியிருந்தார். அன்னையையும், முனிவரையும் எதிர்பார்த்துத்தான் இங்கே வந்தேன், அன்னை அமர்ந்திருப்பதாக எண்ணியே வணங்கினேன்...”

வேகமாகக் கூறிக் கொண்டே வந்த இளங்குமரனின் தாவிலிருந்து மேற்கொண்டு சொற்கள் பிறக்கவில்லை, அப்படியே திகைத்து விழிகள் விரிந்தகல இருபுறமும் மாறி மாறிப் பார்த்து மருண்டு நின்றான்.

ஆ! இதென்ன பயங்கரக் காட்சி! இவர்கள் கைகளில் படமெடுத்து நெளியும். இந்த நாகப் பாம்புகளை எப்படிப் பிடித்தார்கள்? இளங்குமரனுக்கு இயக்கர் நடமாட்டம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/30&oldid=1141628" இலிருந்து மீள்விக்கப்பட்டது