பக்கம்:மணி பல்லவம் 1.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

மணிபல்லவம்

வைத்திருக்கிறேன். எண்ணக் கோலத்திலே கண்டதையன்றி உன்னை உனது உண்மைக் கோலத்திலே காணும் பாக்கியமின்றி இன்று இந்த வனத்திலே நான் அனாதையாய்க் கொலையுண்டு விழப் போகிறேனா? உன்னைக் காண முயலும் போதெல்லாம் எனக்கு இப்படி ஏதேனும் தடைகள் நேர்ந்து கொண்டேயிருக்கின்றனவே; அப்படி நேர்வதற்குக் காரணமாக உன்னைச் சூழ்ந்திருக்கும் மர்மங்கள் யாவை? அல்லது என்னைச் சூழ்ந்திருக்கும் மர்மங்கள் யாவை?

“சுவாமி! அருட்செல்வ முனிவரே, தாயாகவும் தந்தையாகவும் இருந்து என்னை வளர்த்து ஆளாக்கிவிட்ட தங்களுக்கு நன்றி செலுத்துமுகமாக என் வாழ்நாள் நெடுகிலும் என்னென்னவோ பணிவிடைகள் எல்லாம் செய்யவேண்டுமென்று நினைத்திருந்தேனே. அவ்வாறு பணிவிடை செய்ய வேண்டிய உடல் இங்கே கொலையுண்டு வீழ்த்தப்படும் போலிருக்கிறதே.”

அப்போது பூம்புகாரின் அன்பிற்கினிய நண்பர்கள் வெற்றிப் பெருமையோடு முல்லைமாலை சூடி நின்ற போது தன்னுடைய சிரிப்பினால் அவனுடைய நெஞ்சில் மற்றோர் முல்லை மாலையைச் சூடிய அந்தப் பெண், தோற்று வீழ்ந்த யவன மல்லன்– என்று இவ்வாறு தொடர்பும் காரணமுமில்லாமல் ஒவ்வொருவராக இளங்குமரனின் நினைவில் தோன்றினர். அவன் ஏறக்குறைய எல்லா நம்பிக்கைகளையும் இழந்துவிட்ட அந்தச் சமயத்தில் சம்பாபதி கோவிலின் கிழக்குப் புறத்தில் இருந்து குதிரைகள் வரும் குளம்பொலி கேட்டது. புறநகர்ப் பகுதிகளிலுள்ள இடங்களைக் காக்கும் யாமக் காவலர்கள் சில சமயங்களில் அப்படி வருவதுண்டு. இளங்குமரன் மனத்தில் நம்பிக்கை சற்றே அரும்பியது. ஆனால், எதிரிகளின் பிடி அவனை நெருக்கிற்று. குளம்பொலி அருகில் நெருங்கி வந்து கொண்டேயிருந்தது. இராக்காவலர்கள் எழுப்பும் எச்சரிக்கைக் குரலும் இப்போது குளம்பொலியோடு சேர்ந்து ஒலித்தது. அதில் ஒரு குரல் தனக்குப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/33&oldid=1141632" இலிருந்து மீள்விக்கப்பட்டது