பக்கம்:மணி பல்லவம் 1.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

35

புறப்பட்டபோது இளங்குமரன் ஓய்வு கொள்வதற்காக வந்த வழியே திரும்பினான். பக்கத்துப் புதரிலிருந்து ஈனக் குரலில் யாரோ மெல்ல வலியோடு முனகுவது போல ஒலி வரவே விரைவாகச் சென்று சம்பாபதி கோயில் தீபத்தை எடுத்து வந்து அந்த இடத்துக்குப் போய்ப் புதரை விலக்கிப் பார்த்தான் இளங்குமரன். யாரோ கையும் காலும் கட்டுண்டு புதரில் விழுந்திருந்தது தெரிந்தது. விளக்கை இன்னும் தணித்துப் பிடித்து மயங்கிய நிலையில் கட்டுண்டு விழுந்திருந்தவரை முகம் நிமிர்த்திப் பார்த்த போது இளங்குமரனின் வாயிலிருந்து ‘ஆ’வென்ற அலறல் கிளம்பியது. தன் ஊனுடம்பு முழுவதும் எவருக்கு இடை விடாமல் பணி செய்யக் கடன் பட்டிருக்கிறதென இளங் குமரன் நினைத்து வந்தானோ, அந்த அருட் செல்வ முனிவரைத் தாக்கிக் கையையும் காலையும் கட்டிப் போட்டிருந்தார்கள் பாவிகள். இளங்குமரனுக்கு இரத்தம் கொதித்தது, “கதக்கண்ணா ! அந்தப் பாவிகளைத் தேடிக் கண்டுபிடிப்பதாகத்தான் நீ வஞ்சினம் கூறினாய். எனக்கோ அவர்களைத் தேடிக் கண்டுபிடித்து என் மதிப்பிற்குரியவரை இப்படிச் செய்ததற்காகச் செம்மையாய் அவர்களை அறைந்துவிட்டு அதன்பின் அவர்களுடைய வஞ்சகக் கொடுவாளுக்கு இரையாகி இறந்தாலும் கவலையில்லை என்று தோன்றுகிறது” என்று ஆவேசத்தோடு தனக்குத்தானே சொல்லிக் கொண்டான் இளங்குமரன்.


4. முல்லைக்குப் புரியவில்லை !

சம்பாபதி வனத்திலிருந்து வெளியேறி அப்பாலுள்ள கோட்டங்களையும் தவச் சாலைகளையும் பலபல சமயுத்தார் வழிபாட்டுக்கு மலர் கொய்யும் மலர் வனங்களையும் கடந்து வந்துவிட்டால் புறவீதி நிலாவொளியில் குளித்துக் கொண்டு நீண்டு தோன்றியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/36&oldid=1141635" இலிருந்து மீள்விக்கப்பட்டது