பக்கம்:மணி பல்லவம் 1.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

மணிபல்லவம்

புறவீதியின் தொடக்கத்தில் மலர் வனங்களின் எல்லை முடிவடைந்ததனால் மெல்லிய காற்றோடு அவ்வனங்களில் மறுநாள் வைகறைக்காக அரும்பவிழ்த்துக் கொண்டிருந்த பல்வேறு பூக்களின் இதமான மணம் கண்ணுக்குப் புலனாகாத சுகந்த வெள்ளமாய் அலை பரப்பிக் கொண்டிருந்தது. எங்கும் பின்னிரவு தொடங்கி விட்டதற்கு அடையாளமான மென்குளிர்ச் சூழல். எங்கும் பால் நிலா ஒளி. எங்கும் மலர் மணக் கொள்ளை. ஆகா! அந்த நேரத்தில் அந்தச் சூழ்நிலையில் புறவீதிதான் எத்தனை அழகாயிருந்தது!

புற நகரின் இராக் காவலர்களும் சோழர் கோநகரான பூம்புகாரைச் சுற்றி இயற்கை அரண்களுள் ஒன்றாக அமைக்கப்பட்டிருந்த காவற் கோட்டை காக்கும் பொறுப்புள்ள வீரர்களும் அதிகமாக வசிக்கும் குடியிருப்பு வீதி அது. சில பெரிய வீடுகளின் முன்புறத் திண்ணைகளில் வேல்களும் ஈட்டிகளும், சூலாயுதங்களும் சாத்தி வைக்கப்பட்டிருந்தன. சித்திர வேலைப்பாடமைந்த பெரிய பெரிய மரக்கதவுகளில், சோழப் பேரரசின் புலிச்சின்னம் செதுக்கப் பெற்றிருந்தது. அந்த அமைதியான நேரத்தில் திண்ணை முரசங்களில் அடிக்கொருதரம் காற்று மோதியதனால் எழுந்த ஓசை வீதியே உறுமுவது போல் பிரமை உண்டாக்கியது, சிறுசிறு வெண்கலமணிகள் பொருத்திய கதவுகளில், காற்று மோதியபோது வீதியே கலீரென்று சிரிப்பது போல் ஓரழகு புலப்பட்டுத் தோன்றி ஒடுங்கிக் கொண்டிருந்தது.

அந்த நிலையில், சம்பாபதி வனத்துப் புதரில் தாக்கப்பட்டு மயங்கிக்கிடந்த முனிவரின் உடலைச் சுமந்தவாறு புறவீதியில் தனியாக நடந்து வந்து கொண்டிருந்தான் இளங்குமரன். மாலையில் கடற்கரையில் கிடைத்த வெற்றி அனுபவமும் அதன்பின் நினைத்தாலே கதைபோல் தோன்றக்கூடிய சம்பாபதி வனத்துப் பயங்கர அனுபவங்களும், இப்போது மலர் மணமும் சீதமாருதமும் தவழும் புறவீதியில் முனிவரின் மெலிந்த உடலைத் தாங்கி நடக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/37&oldid=1141636" இலிருந்து மீள்விக்கப்பட்டது