பக்கம்:மணி பல்லவம் 1.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

37

இந்த அனுபவமும், எல்லாம் ஏதோ திட்டமிட்டுத் தொடர்பாக வரும் அபூர்வக் கனவுகள் போல் தோன்றின அவனுக்கு.

புறவீதியின் நடுப்பகுதி முரசமும் ஆயுதங்களும் மற்ற வீடுகளில் காணப்பட்டதைவிடச் சற்று மிகுதியாகவே வைக்கப்பட்டிருந்த ஒரு பெரிய வீட்டில் படியேறி ‘முல்லை! முல்லை! கதவைத் திற’ என்று இரைந்து கூப்பிட்டவாறே கதவைத் தட்டினான் இளங்குமரன். நிசப்தமான வீதியில் அவன் குரலும் கதவைத் தட்டியதனால் நாவசைந்து ஒலித்த மணிகளின் ஒலியும் தனியோசைகளாய் விட்டொலித்தன. சிறிது நேரம் இவ்வாறு கதவைத் தட்டியும், குரல் கொடுத்தும் உள்ளே இருப்பவர்களைத் தூக்கத்திலிருந்து எழுப்ப முயன்ற அவன் முயற்சி வெற்றி பெற்றது.

உள்ளிலிருந்து யாரோ ஒரு பெண் அளவாய்ப் பாதம் பெயர்த்து நடைபயின்று வருவதை அறிவிக்கும் சிலம்பொலி மெல்லக் கேட்டது. திறவுகோல் நுழைக்கும் துளை வழியே உள்ளிருந்து கதவருகே நெருங்கிவரும் தீப ஒளியும் தெரிந்தது. இளங்குமரன் கண்ணை அருகிற் கொண்டு போய்த் திறவுகோல் நுழைவின் வழியே பார்த்தான். பேதமைப் பருவத்துப் பெண்ணான முல்லை கையில் தீபத்துடன் சுரிகுழல் அசைவுறத் துயிலெழு மயிலெனப் பரிபுர ஒலி எழச் சித்திரம் நடந்து வருவதுபோல் வந்து கொண்டிருந்தாள். தூக்கம் கலைந்து அழகு செருகினாற் போல் அப்போது அற்புதமாய்க் காட்சியளித்தன. முல்லையின் கண்களும், முகமும் துயில் நீங்கிய சோர்வு ஒடுங்கிய நீண்ட விழிகள் தாம் எத்தனை அழகு என்று வியந்தான் இளங்குமரன். விளக்கு ஒளியும், சிலம்பொலியும் நெருங்கி வந்தன. கதவின் தாழ் ஓசையோடு திறக்கப்பட்டது.

தன் கையிலிருந்த பிடிவிளக்கைத் தூக்கி, வந்திருப் பவரின் முகத்தை அதன் ஒளியில் பார்த்தாள் முல்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/38&oldid=1141637" இலிருந்து மீள்விக்கப்பட்டது