பக்கம்:மணி பல்லவம் 1.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

மணிபல்லவம்

“நீங்களா?” என்ற இனிய வினாவுக்குப் பின் முல்லையின் இதழ்களில் முல்லை மலர்ந்தது.

"யாரையோ தூக்கிக் கொண்டு வந்திருக்கிறீர்களே! யார் அது?”

"ஏதேது? வாயிலிலேயே நிறுத்தி வைத்துக் கொண்டு நீ கேட்கிற கேள்விகளைப் பார்த்தால் உள்ளே வர விடாமல் இங்கேயே பேசி விடைகொடுத்து அனுப்பி விடுவாய். போலிருக்கிறதே?”

“ஐயையோ, அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை, உள்ளே வாருங்கள். இந்திரவிழா பார்த்துவிட்டு நகருக்குள்ளிலிருந்து நானும் தந்தையும் கூடச் சிறிது நாழிகைக்கு முன்தான் இங்கே வீட்டுக்குத் திரும்பி வந்தோம்” என்று கூறிய போது முல்லையின் இதழ்களில் மீண்டும் முல்லை மலர்ந்தது. இளங்குமரன் உள்ளே நுழைந்து அங்கிருந்த கட்டில் ஒன்றில் அருட் செல்வ முனிவரின் உடலைக் கிடத்தினான். அவரை அங்கே கிடத்தியவுடனே இப்போது நன்றாகத் தெரியும் இளங்குமரனின் தோளிலும் மார்பிலும் சிறுசிறு காயங்கள் தென்படுவதையும் அவன் சோர்ந்திருப்பதையும் பார்த்து ஒன்றும் புரியாமல் மருண்டு நின்றாள் முல்லை.

“முல்லை! சம்பாபதி வனத்தில் காவலுக்காகச் சுற்றிக் கொண்டிருந்த உன் தமையனைச் சந்தித்தேன்; அவன்தான் என்னை இங்கே போகச் சொல்லி அனுப்பினான். அவனை அந்தப் பக்கம் அனுப்பிவிட்டுத் திரும்பினால், இன்னொரு புதரில் இவரை யாரோ அடித்துப் போட்டிருப்பது தெரிந்தது, இவரையும் எடுத்துக் கொண்டு நேராக இங்கு வந்து சேர்ந்தேன்; இனிமேல் கவலையில்லை: நாளை விடிகிறவரை இரண்டு பேரும் முல்லைக்கு அடைக்கலம்தான்.”

இதைக்கேட்டு முல்லை சிரித்தாள். “உங்கள் உடம்பைப் பார்த்தாலும், நீங்கள்கூட யாருடனோ பலமாகச் சண்டை போட்டுவிட்டு வந்திருப்பீர்கள் போலிருக்கிறதே?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/39&oldid=1141638" இலிருந்து மீள்விக்கப்பட்டது