பக்கம்:மணி பல்லவம் 1.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

மணிபல்லவம்

களுக்கு நடுவில் ஒலித்தாலே ஆயிரம் தலைகளும் பெருமிதத்தோடு வணங்கித் தாழ்ந்ததுண்டு. இன்று அவருடைய ஆசையெல்லாம் தாம் அடைந்த அத்தகைய பெருமைகளைத் தம் புதல்வன் கதக்கண்ணனும் அடைய வேண்டுமென்பதுதான்.

முல்லைக்கும் தன்னுடைய நண்பனுக்கும் தந்தை என்ற முறையினால் மட்டுமில்லாமல் வேறு சில காரணங்களாலும் இளங்குமரன் வீரசோழிய வளநாடுடையார் மேல் பெருமதிப்பு வைத்திருந்தான். ஆனால் அவருக்கு மட்டும் அவனைப் பற்றிய மனக்குறையொன்று உண்டு. வல்லமையும், தோற்றமும், கட்டழகும் வாய்ந்த இளங்குமரன் சோழப்பேரரசின் காவல் வீரர்களின் குழுவிலோ, படைமறவர் அணியிலோ சேர்ந்து முன்னுக்கு வர முயலாமல் இப்படி ஊர் சுற்றியாக அலைந்து கொண்டிருக்கிறானே என்ற மனக்குறைதான் அது. அதை அவனிடமே இரண்டொரு முறை வாய் விட்டுச் சொல்லிக் கடிந்து கொண்டிருக்கிறார் அவர்.

“தம்பீ! உன்னுடைய வயதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பூம்புகாரின் புறநகர்க் காவல் வீரர்களுக்குத் தலைவனாக இருந்தேன் நான். இந்த இரண்டு தோள்களின் வலிமையால் எத்தனை பெரிய காவற் பொறுப்புக்களைத் தாங்கி நல்ல பெயர் எடுத்திருக்கிறேன் தெரியுமா? நீ என்னடாவென்றால் அவிழ்த்து விடப்பட்ட இளங்காளை போல் இந்த வயதில், மருவூர்ப்பாக்கத்து விடலைகளோடு நாளங்காடிச் சதுக்கத்தில் வம்பும் வாயரட்டையுமாகத் திரிகிறாய்! முனிவர், உன்னைச் செல்லமாக வளர்த்து ஆளாக்கிவிட்ட பாசத்தை மீற முடியாமல் கண்டிக்கத் தயங்குகிறார்.”

இவ்வாறு அவர் கூறுகிறபோதெல்லாம் சிரிப்போடு தலைகுனிந்து கேட்டுக் கொண்டு மெல்ல அவருடைய முன்னிலையிலிருந்து நழுவி விடுவது இளங்குமரனின் வழக்கம். ஆனால் இன்றென்னவோ வழக்கமாக அவனிடம் கேட்கும் அந்தக் கேள்வியைக்கூட அவர் கேட்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/45&oldid=1141646" இலிருந்து மீள்விக்கப்பட்டது