பக்கம்:மணி பல்லவம் 1.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

45

வில்லை. காரணம் முதல்நாளிரவு சம்பாபதி வனத்தில் முனிவருக்கும் தனக்கும் ஏற்பட்ட துன்பங்களை முற்றிலும் கூறாவிடினும் ஓரளவு சுருக்கமாகக் காலையில் அவருக்குச் சொல்லியிருந்தான் இளங்குமரன்.

“தம்பி நேற்றிரவு சம்பாபதி வனத்தில் கதக்கண்ணனும் அவன் தோழனும் காவலுக்காகச் சுற்றி வந்த போது நீ சந்தித்ததாகக் கூறினாயே? விடிந்து இவ்வளவு நேரமாகியும் கதக்கண்ணன் வீடு வந்து சேரவில்லையே அப்படி எங்கே சுற்றிக் கொண்டிருக்கிறான் அவன்?” என்று வீரசோழிய வளநாடுடையார் கேட்டபோது அவருக்கு என்ன மறு மொழிகூறுவதெனச் சிந்தித்தாற்போல் சில வினாடிகள் தயங்கினான் இளங்குமரன். ஏனென்றால் கதக்கண்ணன் தன்பொருட்டு வஞ்சினம் கூறித் தன்னுடைய எதிரிகளைத் துரத்திக் கொண்டுதான் போயிருக்கிறான் என்ற செய்தியை அவன் கிழவரிடம் கூறவில்லை. தன்னையும் முனிவரையும் சம்பாபதி வனத்தில் யாரோ சிலர் வழி மறித்துத் தாக்கியதாகவும், கதக்கண்ணனும் மற்றொரு காவல் வீரனும் அந்த வழியாக வந்தபோது தாக்கியவர்கள் ஓடிவிட்டதாகவும் மட்டும் ஒருவிதமாக அவரிடம் சொல்லிவைத்திருந்தான் இளங்குமரன்.

“ஐயா! இந்திர விழாக் காலத்தில் நேரத்தோடு வெளியேறி நேரத்தோடு வீடுதிரும்ப வேண்டுமென்று எதிர்பார்க்கலாமா? நீங்களும் முல்லையும் நேற்றுமாலை விழாக் கோலத்தை யெல்லாம் பார்த்து வந்து விட்டீர்கள். கதக்கண்ணனுக்கும் விழாக் காண ஆவல் இருக்கும் அல்லவா? நேற்றிரவே நகருக்குள் போயிருப்பான். அங்கே படைமறவர் பாடிவீடுகள் ஏதாவதொன்றில் தங்கியிருந்து விடிந்ததும், ஊர் சுற்றிப் பார்த்து விட்டுத் தானாக வந்து சேர்வான்” என்று அவருக்கு மறுமொழி கூறினான் இளங்குமரன். கிழவர் அவனுடைய அந்த மறுமொழியால் சமாதானம் அடைந்தவராகத் தெரியவில்லை.

“அண்ணன் ஊருக்கெல்லாம் பயமில்லாமல் காவல் புரிகிறேன் என்று வேலேந்திய கையோடு இரவிலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/46&oldid=1141647" இலிருந்து மீள்விக்கப்பட்டது