பக்கம்:மணி பல்லவம் 1.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

47

இளங்குமரன் புன்னகை புரிந்தவாறே இவ்வாறு கூறிவிட்டு, வீரசோழிய வளநாடுடையாரையும் அவருடைய செல்ல மகளையும் மாறிமாறிப் பார்த்தான். “அருட்செல்வ முனிவரே! உங்களுடைய வளர்ப்புப் பிள்ளையாண்டானுக்கு அறிவும் பொறுப்பும் வளர்ந்திருக்கிறதோ இல்லையோ வாய்ப் பேச்சு நன்றாக வளர்ந்திருக்கிறது” என்று அதுவரை தாம் எதுவும் பேசாமல் அவர்களுடைய வம்பு உரைகளைக் கேட்டுக் கொண்டிருந்த முனிவரை நோக்கிக் கூறினார் வீரசோழிய வளநாடுடையார். இதைக் கேட்டு முனிவர் பதிலேதும் கூறவில்லை. அவருடைய சாந்தம் தவழும் முகத்தில் சிரிப்பு மலர்ந்து அடங்கியது. அந்தச் சிரிப்பின் குறிப்பிலிருந்து கிழவர் கூறியதை அவர் அப்படியே ஒப்புக் கொண்டதாகவும் தெரியவில்லை. அப்படியே மறுத்ததாகவும் தெரியவில்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு பொருளை உய்த்துணர இடமளித்தது அந்தச் சிரிப்பு.

இளங்குமரனுக்கு, ‘குழந்தாய் நீ கவலைப்படாமல் முல்லையோடு நாளங்காடிக்குப் புறப்பட்டுப் போய்விட்டு வா, நேற்றிரவு சம்பாபதி வனத்தில் நடந்தவற்றிலுள்ள இரகசியத்தையோ, அல்லது வேறு இரகசியங்களையோ இந்தக் கிழவரிடம் வரம்பு மீறிச் சொல்லிவிட மாட்டேன்!’ என்று அபயமளித்தது அந்தச் சிரிப்பு. முல்லைக்கோ, பெண்ணே ‘உன் இதயத்தில் இளங்குமரனைப் பற்றி வளரும் இனிய நினைவுகள் புரியாமல் உன் தந்தை அவனை இப்படி உன் முன்பே ஏளனம் செய்கிறாரே’ என்ற குறிப்பைக் கூறியது அந்தச் சிரிப்பு.

‘உங்கள் முதுமைக்கும், அனுபவங்களுக்கும் பொருத்தமானவற்றைத்தான் இளங்குமரனுக்கு நீங்கள் சொல்லுகிறீர்கள்’ என்று கிழவரை ஆதரிப்பதுபோல் அந்தச் சிரிப்பு அவருக்குத் தோன்றியிருக்கும். எந்த மனவுணர்வோடு பிறருடைய சிரிப்பையும் பார்வையையும் அளவிட தேருகிறதோ, அந்த உணர்வுதானே அங்கும் தோன்றும்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/48&oldid=1141649" இலிருந்து மீள்விக்கப்பட்டது