பக்கம்:மணி பல்லவம் 1.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
எழுதியவன் கதை


து என்னுடைய இரண்டாவது சரித்திர நாவல். நான் முதலாவது என்று மனப்பூர்வமாக நினைக்கக்கூடிய இந்த நாவல் படைத்த முறைப்படி வருகிற எண்ணிக்கையில் இரண்டாவது வரிசையில் நிற்கிறது. இந்த நாவலை எழுதத் திட்டமிடுவதற்கு முன்பே சில கொள்கைகளைச் சிறப்பாகவும் சிரத்தையாகவும் வகுத்துக் கொண்டேன் என்பதை நான் இப்போது மீண்டும் நினைவு கூர்கிறேன். வரலாற்றையே முழு நிலைக்களனாக எடுத்துக் கொள்ளாமல் வரலாற்றுப் பின்னணியையும், சூழ்நிலைகளையும் அமைத்துக் கொண்டு அழகும் ஆழமும் மிகுந்த ஒரு கதையைப் புனைய வேண்டுமென்று நான் எண்ணியிருந்த எண்ணம் இந்த நாவலில் ஓரளவு நன்றாகவே நிறைவேறியிருக்கிறது.

நமது இலக்கியங்களில் வரலாற்றுக் காலத்துப் பூம்புகார் நகரம் கம்பீரமான வருணனைகளால் போற்றிப் புகழப்பட்டிருப்பதைப் பலமுறை படித்திருக்கிறோம். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இலண்டன் மாநகரத்தைக் காட்டிலும் நகர்ப்பரப்பினாலும் பிற பெருமைகளாலும் பூம்புகார் நகரம் சிறப்புற்றிருந்ததாகச் சொல்லுகிறார்கள். இலக்கியங்களிலும் காவியங்களிலும் படித்துப் படித்து மனக்கண்ணால் கண்டிருந்த பூம்புகார் நகரம் என்னை ஏற்கெனவே மயக்கியிருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். இந்தக் கதையை எழுதியதனால் அந்த மயக்கம் இன்னும் வளர்ந்ததே ஒழியக் குறையவில்லை.

போர்க்களங்களில் வில்லும், வேலும், வாளும், கேடயமும் ஏந்திச் செய்கிற போரைப் போலவே வரலாற்றுக் காலத்துப் பூம்புகாரின் சந்திகளிலும் சதுக்கங்களிலும் பல்வேறு சமயவாதிகள் அறிவுப் போர் நடத்திக் கொண்டிருந்ததாக நூல்களில் படித்திருக்கிறோம். புகழும் பெருமையும் மிக்க அந்த அறிவுப் போரில் இந்தக் கதாநாயகனும் ஈடுபடுகிறான். வெற்றி பெறுகிறான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/5&oldid=1141553" இலிருந்து மீள்விக்கப்பட்டது