பக்கம்:மணி பல்லவம் 1.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

49

இப்படி ஏதாவது வம்புகள் தாம் வந்து சேருகின்றன. நேற்று மாலை கடற்கரையில் ஒரு யவன மல்லனோடு வலுச்சண்டைக்குப் போய் வெற்றி பெற்றேன். நேற்று இரவு சம்பாபதி வனத்தில் என்னிடம் யாரோ வலுச்சண்டைக்கு வந்தார்கள். வாங்கிக் கட்டிக் கொண்டேன். இந்திர விழாவின் இருபத்தெட்டு நாட்களும் என் பங்குக்கு நேரடியாகவோ, நண்பர்கள் மூலமாகவோ, இப்படி வம்புகள் தாம் எவையேனும் தேடிவரும் போலும்.”

“ஒருவேளை நீங்களாகவே வம்புகளைத் தேடிக் கொண்டு போகிறீர்களோ என்னவோ?”

“பார்த்தாயா? நீயே என்னிடம் வம்புக்கு வருகிறாயே முல்லை; வீரசோழிய வளநாடுடையார்தான் குறும்பாகவும், குத்தலாகவும் பேசுகிறாரென்று பார்த்தால் அவருடைய பெண் அவரையும் மீறிக் கொண்டு குறும்புப் பேச்சில் வளர்கிறாளே? உன்னைச் சொல்லிக் குற்றமில்லை பெண்ணே, என் தலையெழுத்தே அப்படி. சில பேர்கள் நல்வாய்ப்புகளையே தேடிக்கொண்டு போகிறார்கள். இன்னும் சில பேர்களை நல்வாய்ப்புக்களே எங்கே எங்கேயென்று தேடிக்கொண்டு வருகின்றன. என்னைப் பொறுத்தமட்டில் நானாகத் தேடிக் கொண்டு போனாலும் வம்புதான் வருகிறது.” தானாக என்னைத் தேடிக் கொண்டு வந்தாலும் வம்புதான் வருகிறது.”

“வம்பில் யோகக்காரராக இருக்கிறீர்கள் நீங்கள்! இல்லையா?”

“அதில் சந்தேகமென்ன பெண்ணே! இன்றைக்கு வாய்த்த முதல் வம்பு நீதான்–”

“இரண்டாவது வம்பு?”

“இனிமேல்தான் எங்கிருந்தாவது புறப்பட்டுவரும்...”

இதைக் கேட்ட முல்லை கலீரெனச் சிரித்தாள். இப்படி விளையாட்டாகப் பேசிக் கொண்டே நாளங்காடியை நோக்கி விரைந்தார்கள் அவர்கள்.

ம-4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/50&oldid=1141662" இலிருந்து மீள்விக்கப்பட்டது