பக்கம்:மணி பல்லவம் 1.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

மணிபல்லவம்

பூம்புகாரின் செல்வவளம் மிக்க பட்டினப்பாக்கத்துக்கும் பலவகை மக்கள் வாழும் மருவூர் பாக்கத்துக்கும் இடையிலுள்ள பெருநிலப் பகுதியாகிய நாளங்காடியில் மக்கள் வெள்ளம் போல் கூடியிருந்தனர். அங்கே கோயில் கொண்டிருந்த சதுக்கப்பூதம், அங்காடிப் பூதம் என்னும் இரண்டு வானளாவிய தெய்வச் சிலைகள் வெகு தொலைவிலிருந்து பார்ப்போர்க்குப் பயங்கரமாகக் காட்சியளித்தன. பூதங்களுக்கு முன்னாலிருந்த பெரிய பெரிய பலிப் பீடிகைகளில் பூக்களும், பணியாரங்களும் குவித்து வழிபடுவோர் நெருக்கமாகக் குழுமியிருந்தனர். மடித்த வாயும் தொங்கும் நாவும் கடைவாய்ப் பற்களுமாக ஒரு கையில் வச்சிராயுதமும், மற்றொரு கையில் பாசக் கயிறும் ஏந்திய மிகப் பெரும் பூதச் சிலைகள் செவ்வரளி மாலை அணிந்து எடுப்பாகத் தோன்றின. ‘பசியும் பிணியும் நீங்கி நாட்டில் வளமும் வாழ்வும் பெருக வேண்டுமென்று’ பூதங்களின் முன் வணங்கி வாழ்த்துரைப்போர் குரல் நாளங்காடியைச் சூழ்ந்திருந்த அடர்ந்த மரச்சோலையெங்கும் எதிரொலித்துக் கொண்டிருந்தது. துணங்கைக் கூத்து ஆடுகிறவர்களின் கொட்டோசை ஒருபுறம் முழங்கியது.

நாளங்காடிப் பூத சத்துக்கத்துக்கு முன்னால் நான்கு பெரிய வீதிகள் ஒன்றுகூடும் சந்தியில் வந்ததும், “முல்லை நீ உள்ளே போய் வழிபாட்டைத் தொடங்கிப் படையலிடு. நான் இந்தப் பக்கத்தில் என் நண்பர்கள் யாராவது சுற்றிக் கொண்டிருக்கிறார்களா என்று பார்த்துவிட்டு உள்ளே வருகிறேன்” என்று இளங்குமரன் அவளை உள்ளே அனுப்பிவிட்டுத் தான் மட்டும் அங்கேயே நின்று கொண்டான்.

“விரைவில் வந்துவிடுங்கள். ஏதாவது வம்பு தேடிக் கொண்டு வந்துவிடப் போகிறது.” சிரித்துக் கொண்டே அவன் பக்கம் திரும்பிப் பார்த்துச் சொல்லிவிட்டுப் பலிப் பீடிகையை நோக்கி நடந்தாள் முல்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/51&oldid=1141664" இலிருந்து மீள்விக்கப்பட்டது