பக்கம்:மணி பல்லவம் 1.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

மணிபல்லவம்

“புண்ணியவான் இல்லை ஐயா! புண்ணியவதி!” என்று கூறிக் கொண்டே கிழக்குப் பக்கமாகத் திரும்பி “அதோ அந்தப் பல்லக்கிலிருந்து இறங்குகிறாரே எட்டிக் குமரன் வீட்டுப் புதல்வியார்- அவருக்கு உங்கள் சித்திரம் வேண்டுமாம்” என்று சுட்டிக் காட்டினான் ஓவியன். இளங்குமரன் அவன் காட்டிய திசையில் பார்த்தான், அவனுடைய முகத்திலிருந்து சிரிப்பும், மலர்ச்சியும் விடை பெற்றன. முதல்நாள் மாலை கடற்கரையில் மற்போர் வெற்றிக்காகத் தனக்கு மணிமாலை பரிசளிக்க முன்வந்த அதே அழகி. பல்லக்கிலிருந்து இறங்கி, ஒளி சிதறிக் கொண்டு நடைபயில்வதுபோல் தனது அணிமணிகள் சுடரிடத் தோழியோடு பூதசதுக்கத்து வாயிலுக்கு வருவதை அவன் கண்டான்.

“ஐயா! உங்கள் ஓவியத்தை எழுதி முடித்து அவர்கள் இங்கிருந்து திரும்புவதற்குள் கொண்டு வந்து கொடுத்தால் நூறு கழஞ்சு பொன் எனக்குப் பரிசு தருவதாகச் சொல்லி உங்களையும் அடையாளம் காட்டி அனுப்பினார்கள். நீங்கள் என்மேல் கருணை கொண்டு...”

“உன்மேல் கருணை கொள்வதற்கு நான் மறுக்கவில்லை தம்பி! ஆனால் உனக்கு உலகம் தெரியாது. நீ சிறு பிள்ளை. உன்னுடைய சித்திரங்களின் புனைவிலும், பூச்சிலும், விதம் விதமான வண்ணங்களைக் கண்டு மகிழ்வது போல் பேரின்ப நகரமான இந்தப் பூம்புகாரின் வாழ்விலும் ஒளிதரும் வண்ணங்களே நிறைந்திருப்பதாக நீ நினைக்கிறாய். சூதும் வாதும், இகழ்ச்சியும் நிறைந்த பூம்புகாரின் வாழ்க்கைச் சித்திரம் உனக்குத் தெரிந்திராது. அங்கே வண்ணங்கள் வனப்புக் காட்டவில்லை, அழுது வடிகின்றன. வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பிவிடக் கூடாது. செல்வத் திமிர் பிடித்த பட்டினப்பாக்கத்தார் தாம் பூம்பூகார் எனும் வாழ்க்கை ஓவியத்தின் மறுபுறம் மங்கியிருப்பதற்குக் காரணமானவர்கள். இவர்களைக் கண்டாலே. எனக்கு அந்த நினைவு வந்து விடுகிறது. வெறுப்பும் வந்து விடுகிறது. சில சமயங்களில் இவர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/55&oldid=1141670" இலிருந்து மீள்விக்கப்பட்டது