பக்கம்:மணி பல்லவம் 1.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

மணிபல்லவம்

உன் அழகிய முகம் மங்கிய வண்ணம்போல் வாடி, விட்டதே, தம்பி! வா, என்னை வரைந்து கொள். உனக்கு நான் பயப்படுகிறேன் என்பதுதான் என் இணக்கத்துக்குக் காரணம்.”

“ஐயா தனக்காகவே நான் உங்களை வரைகிறேன் என்பதை உங்களிடம் சொல்லாமல் வரைந்து வருமாறு தான் அந்தப் பெண்மணி கூறியிருந்தார். நான்தான் உங்களிடம் மெய்யை மறைக்க முடியாமல் கூறிவிட்டேன். உங்கள் கண்களுக்கு எதிரே நின்று பேசுகிறபோது உண்மையை மறைத்துப் பேச வரவில்லை.”

“பார்த்தாயா? அவளுக்காக என்பதை நீ என்னிடம் கூறினால் நான் இணங்க மாட்டேன் என்று அந்த அழகரசிக்கே நன்றாகத் தெரியும் தம்பி!”

“ஏன் ஐயா? உங்களுக்குள் ஏதாவது கோபமா?”

“தம்பி! இந்தக் கேள்வியெல்லாம் கேட்டு நேரத்தை வீணாக்காதே. நீ வரையத் தொடங்கு!”

இளங்குமரன் மீண்டும் குரலில் கடுமையை வரவழைத்துக் கொண்டு கண்டித்த பின்புதான் ஓவியன் மணிமார்பன் பேச்சைக் குறைத்து வேலையில் இறங்கினான். மரத்தைத் தழுவினாற் போல் படர்ந்திருந்த ஒரு முல்லைக்கொடியைப் பிடித்தவாறு மலர்ந்த முகத்தோடு சித்திரத்துக்கு வாய்ப்பான கோலத்தில் நின்றான் இளங்குமரன். திரைச் சீலையை விரித்து வண்ணப் பேழையைத் திறந்து வரையலானான் மணிமார்பன். நாளங்காடிச் சதுக்கப் பூதத்தின் பலிப் பீடிகையிலிருந்து முல்லை வழி பாட்டை முடித்துக் கொண்டு திரும்புமுன் மணி மார்பனுடைய வரைவு வேலை முடிந்துவிட்ட வேண்டுமென்று துரிதப்படுத்தினான் இளங்குமரன். முல்லை கொண்டு வரப்போகும் நெய் எள்ளுருண்டையை நினைக்கும்போது அவன் நாவில் சுவை நீர் சுரந்தது.

“ஐயா! உண்மையிலேயே நீங்கள் மிகவும் அழகாய்த் தான் இருக்கிறீர்கள் !”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/57&oldid=1141672" இலிருந்து மீள்விக்கப்பட்டது