பக்கம்:மணி பல்லவம் 1.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

57

“தம்பீ! அப்படியானால் என்னுடைய அழகைப் பற்றி இதுவரையில் உனக்குச் சந்தேகம் இருந்ததா? நான் அழகாயிருப்பது எவ்வளவு பெரிய தவறு என்பது இன்று இந்த நாளங்காடி நாற்சந்தியில் நீ என்னைத் தேடி வந்ததிலிருந்தே தெரிந்து விட்டது. அழகாயிருப்பதைப் பற்றி நீயும் நானும் நினைத்துப் பார்க்க நேரமேது? பொன்னிலும், யானைத் தந்தத்திலும் யவனப்பாடி யிலுள்ள சிற்பிகள் எவ்வளவோ அழகான சிலைகள் செய்கிறார்களே, அவற்றையெல்லாம் விலைக்கு வாங்கிச் செல்கிறவர்கள் பட்டினப்பாக்கத்துச் செல்வர்கள்தாம், அதே போல் அழகாயிருக்கிற ஆட்களையும் அன்பு என்கிற விலைக்கு வாங்கிவிடத் துடிக்கிறார்கள் அவர்கள்.”

“நீங்கள் அதைவிடப் பெரிய விலை ஏதேனும் எதிர் பார்க்கிறீர்களோ?”

“என் தன்மானமும் தன்னம்பிக்கையும் பட்டினப்பாக்கத்து ஏழு அடுக்கு மாட்டங்களைவிட உயரமானவை தம்பி!”

“என்ன காரணத்தாலோ பட்டினப்பாக்கத்து ஆடம்பர வாழ்வின் மேலும், செல்வச் சுகபோகங்கள் மேலும் உங்களுக்கு வெறுப்பு ஏற்பட்டிருப்பது தெரிகிறது, ஐயா.”

இதற்கு இளங்குமரன் பதில் சொல்லவில்லை. மணி மார்பனும் குறிப்பறிந்து பேசுவதை நிறுத்திக் கொண்டான். கரும்புவில்லில் மலர்க்கணை தொடுத்த கோலத்தில் மன்மதன் நிற்பது போல் முல்லைக் கொடியைப் பிடித்தாற் போல் நிற்கும் இளங்குமரன் திரைச்சீலையில் உருவாகிக் கொண்டிருந்தான்.

அப்போது சிலம்பொலி கிளரச் சீரடி பெயர்த்து நடந்து வந்தாள் முல்லை.

“உங்களை எங்கே எல்லாம் தேடுவது?” என்று கூறிக் கொண்டே நெய்மணம் கமழும் எள்ளுருண்டைப் பணியாரத்தை முன் நீண்ட அவன் கையில் வைத்துவிட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/58&oldid=1141673" இலிருந்து மீள்விக்கப்பட்டது