பக்கம்:மணி பல்லவம் 1.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4

இந்தக் கதாநாயகனின் வாழ்க்கை ஓர் அழகிய தத்துவம். சுரமஞ்சரியிலிருந்து முகுந்தபட்டர் வரை எல்லாரும் கதாநாயகனாகிய இளங்குமரனுக்குத் தோற்றுப் போவதாக அவனிடமே சொல்கிறார்கள். அவனோ யாரையுமே வென்றதாக ஒப்புக் கொள்ள மாட்டேனென்கிறான். இறுதிவரை பிடிவாதமாக அன்பு செய்து அவனை வென்றவளாகிய சுரமஞ்சரியும்கூடதான் வெற்றி பெற்றதை மறந்து அவனுக்குத் தோற்றதாகவே அவனிடம் சொல்கிறாள். உடம்பினாலும் தோற்றத்தாலும் மட்டுமல்லாமல் குணங்களாலும் மிக அழகியவன் இந்தக் கதாநாயகன். குணங்களாலும் அழகுடையவர்கள் காதலிக்கத் தகுந்தவர்கள். இந்தக் கதையின் எல்லாக் கதாபாத்திரங்களுமே இளங்குமரனுடைய குண அழகை ஏதோ ஒரு வகையில் ரசிக்கிறார்கள். வீரத்தையே ஒரு தவமாகச் செய்யும் நீலநாகர், பிடிவாதமாக அன்பு செய்து தளரும் முல்லை, தீமைகளின் எல்லையில் போய் நிற்கும் பெருநிதிச் செல்வர், நகைவேழம்பர்- இளங்குமரனுடைய முழு வாழ்க்கையையுமே தன்னையறியாமல் தற்செயலாக வரைந்து முடித்து விடுகிற ஓவியன் மணிமார்பன்-நல்லவற்றுக்குப் பாதுகாப்பு அளிப்பதே ஒரு தவம்- என்று எண்ணும் அருட்செல்வர் - எல்லாரும் இதில் உயிர்க்களையோடு நன்கு உரம்பெற்று நடமாடுகிறார்கள்.

ஆனாலும் இந்தக் கதையில் படிப்பவர்கள் எல்லாரையும் ஒருங்கே கவர்கிற கதாபாத்திரம் சுரமஞ்சரியாகத்தான் இருப்பாள். இளங்குமரனுக்காக ஏங்கி ஏங்கி உருகி அவள் எல்லாவற்றையும் இழந்து விட்டுக் கடைசியாக அவனைப் பற்றிய விருப்பத்தை மட்டும் இழக்க இயலாமல் அவன் பாதங்களில் வீழ்ந்து கண்ணீர் பெருக்கி - “இந்தப் பாதங்களைத் தொழுவதைத் தவிர எனக்கு வேறு செல்வங்கள் வேண்டியதில்லை” என்று அவனோடு கீழிறங்கி நடக்கும் இடம் மெய் சிலிர்க்கச் செய்வது. இந்தக் கதைக்கும் கதாநாயகனுக்கும் சுரமஞ்சரி என்ற கதாபாத்திரம் இத்தனை முழுமையாகக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/6&oldid=1141555" இலிருந்து மீள்விக்கப்பட்டது