பக்கம்:மணி பல்லவம் 1.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

59

அன்று காலை முல்லையும், இளங்குமரனும் நாளங்காடிப் பூதசதுக்கத்துக்குப் புறப்பட்டுச் சென்ற பின்னர் வீரசோழிய வளநாடுடையாருக்கும், அருட்செல்வ முனிவருக்கும், தங்களுக்குள் உரையாடுவதற்குத் தனிமை வாய்த்தது.

தாம் அறிவதற்கு ஆவல் கொண்டுள்ள பல செய்திகளைத் தூண்டிக் கேட்கும் விருப்பத்துடன் வந்து அமருகிறவர்போல் முனிவரின் கட்டிலுக்கு மிக அருகில் வந்து அமர்ந்தார் வீரசோழிய வளநாடுடையார். அவர் இவ்வாறு வந்து உட்காரும் நோக்கத்தைப் புரிந்து கொண்டவர்போல் தமக்குள் மெல்லச் சிரித்துக் கொண்டார் முனிவர்.

“உங்களுடைய இல்லத்துக்கு வந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டனவே என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன், உடையாரே! எப்படியோ சந்தர்ப்பம் நேற்றிரவு இங்கே வந்து தங்கும்படி செய்துவிட்டது. ஆனால் இப்படி அடி, உதைபட்டுக் கொண்டு வந்து தங்கியிருப்பதை நினைக்கும் போதுதான் என்னவோ போலிருக்கிறது.”

“கவலைப்படாதீர்கள் முனிவரே! நானும் கிழவன், நீங்களும் கிழவர். நம் போன்றவர்களுக்கு இந்த வயதில் இப்படிச் சந்தித்து மனம் விட்டுப் பேசுவதைப்போலச் சுவையான அனுபவம் வேறு கிடைக்க முடியாது. எவ்வளவோ செய்திகளைப் பற்றி விரிவாகப் பேசலாம் அல்லவா?”

“ஆகா! நீங்கள் ஆசைப்படும்போது நான் பேசுவதற்கு மறுக்க இயலுமா? ஆனால் உங்களுடைய கருத்தில் ஒரே ஒரு அம்சத்தை மட்டும் நான் மறுக்க வேண்டியவனாக இருக்கிறேன். மூப்பு நெருங்க நெருங்கப் பேசாமைதான் சுவையான அனுபவமாகப் படுகிறது எனக்கு. மூப்புக் காலத்தில் மனத்தினுள் முன்பு வாழ்ந்த நாளெல்லாம் கட்டி வைத்த நினைவுச் சுமைகளையே அவிழ்த்துப் பார்த்து ஒழுங்கு செய்யக் காலம் காணாதபோது பேசிப் பேசிப் புதிய நினைவுச் சுமைகளையும் சேர்க்கலாமா?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/60&oldid=1141676" இலிருந்து மீள்விக்கப்பட்டது