பக்கம்:மணி பல்லவம் 1.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

மணிபல்லவம்

சாதிக்கும் தகுதி வாய்ந்தவை என்பதை நான் உணர்ந்திருக்கிறேன் முனிவரே!”

“அப்படி நீங்கள் உணர்ந்திருப்பது உண்மையானால் அவனைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆவலைச் சிறிது காலத்துக்கு அடக்கி வைத்துக் கொள்வதுதான் நல்லது.”

“உங்களைப் போல் நிறையப் படித்த ஞானிகளாயிருப்பவர்களுக்குப் பேசுவதில் ஒரு வசதி இருக்கிறது. எதையும் பிறருக்குப் புரியாமலும், பிறராகப் புரிந்து கொள்ள முடியாமலும் அழகாகப் பேசிவிட முடிகிறது.”

வீர சோழிய வளநாடுடையார் தம்மைக் குத்திக் காட்டுவது போல் பேசிய இந்தப் பேச்சைக் கேட்ட பின்பும் முனிவர் அமைதியாகவே சிரித்துக் கொண்டிருந்தார். எத்தகைய பேச்சுக்களையும் ஏற்றுத் தாங்கிப் பழகிய அவருக்கு இது பெரிதாக உறுத்தவில்லை. சாதாரணமானவற்றுக்கெல்லாம் உணர்ச்சி வசப்பட்டுப் பழக்கமில்லை அவருக்கு.

வீரசோழிய வளநாடுடையாருக்கும் அருட்செல்வ முனிவருக்கும் இன்று நேற்றுப் பழக்கமில்லை. ஆனாலும் அன்று அந்த காலை நேரத்துத் தனிமையில் ஒருவருக்கொருவர் ஆழம் பார்க்க முயன்றது இப்படி முடிந்தது. இந்தச் சமயத்தில் வீட்டு வாயிலில் குதிரைகள் வந்து நிற்கும் ஒலி கேட்கவே இருவருடைய பேச்சும் நிற்க நேர்ந்தது. வீரசோழிய வளநாடுடையார் வாயிற்புறம் வந்திருப்பது யாரென்று பார்ப்பதற்காக விரைவாய் எதிர் கொண்டு சென்றார்.

கதக்கண்ணனும் முதல் நாளிரவு அவனுடனே சம்பாபதி வனத்திற்கு சுற்றிய மற்றோர் ஊர்க்காவலனும் வேறு சில இளைஞர்களும் இல்லத்துக்குள் பரபரப்போடு நுழைந்தார்கள்.

“இராக் காவலை முடித்துக் கொண்டு பொழுதோடு வீட்டுக்குத் திரும்பக் கூடாதா குழந்தாய்? இப்படிச் சிறிது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/65&oldid=1141683" இலிருந்து மீள்விக்கப்பட்டது