பக்கம்:மணி பல்லவம் 1.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

65

நேர உறக்கம்கூட இல்லாமல் பொழுது விடிகிறவரை கண் விழித்து ஊர் சுற்றுகிறாயே; உடல் நலம் என்ன ஆவது?” என்று புதல்வனை அன்போடு கடிந்து கொண்டு பேச்சைத் தொடங்கிய வீரசோழிய வளநாடுடையாரை மேலே பேச விடாமல் இடைமறித்து,

“அதெல்லாம் இருக்கட்டும் அப்பா, இப்போது இளங்குமரன் இங்கிருக்கிறானா? இல்லையா? முதலில் அதைச் சொல்லுங்கள்” எனப் பரபரப்போடு விசாரித்தான் அவருடைய அருமைப் புதல்வன் கதக்கண்ணன்.

அவனுடன் வந்து நின்றவர்களும் அவன் கேட்ட அந்தக் கேள்விக்குத் தம்மிடமிருந்து பதிலை எதிர்பார்த்துப் பரபரப்புக் காட்டுவதை அவர்களுடைய முகச் சாயலிலிருந்து வளநாடுடையார் புரிந்துகொள்ள முடிந்தது.

“உன்னுடைய தங்கை முல்லை அந்தப் பிள்ளையாண்டானைத் துணைக்கு அழைத்துக் கொண்டு பூதசதுக்கத்துக்குப் படையல் இடப் போயிருக்கிறாள். நீ திரும்பி வந்தால் உன்னை இங்கேயே இருக்கச் சொன்னான் இளங்குமரன். அவனுக்கு உன்னிடம் ஏதோ முக்கியமான செய்திகள் பேசவேண்டுமாமே?”

இந்த மறுமொழியை அவர் கூறிவிட்டு எதிரே பார்த்தபோது கதக்கண்ணன் உட்பட, நின்றுகொண்டிருந்தவர்களில் ஒருவர்கூட அங்கே இல்லை.

வேகமாக ஓடிப் போய்க் குதிரைகளில் தாவி ஏறிக் கொண்டிருந்தார்கள்.

அடுத்த கணம் வாயிலில் நின்ற குதிரைகள் புற வீதியில் புழுதிப் படலத்தைக் கிளப்பிக் கொண்டு பறந்தன.

“அப்படி என்ன அவசரம் குடிமுழுகிப் போகிறதோ?” என்று தமக்குள் முணுமுணுத்தபடி வாயிலில் இறங்கிக் குதிரைகள் விரைந்து செல்லும் திசையில் வெறித்து நோக்கினார் அவர்.

ம-5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/66&oldid=1141685" இலிருந்து மீள்விக்கப்பட்டது