பக்கம்:மணி பல்லவம் 1.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


8. சுரமஞ்சரியின் செருக்கு

ண்மூடித் திறக்கும் நேரத்தில் அந்த நிகழ்ச்சி நடந்து விட்டது. ஓவியன் மணிமார்பன் பயந்துபோய் ஒதுங்கி நின்றான். முல்லை திடுக்கிட்டு அலறினாள். நாலைந்து முரட்டு யவனர்களும் பூதாகாரமான மல்லன் ஒருவனும் இளங்குமரனைச் சூழ்ந்து கொண்டு அவனைத் தாக்குவதற்குத் தொடங்கி இருந்தார்கள்.

“நேற்று மாலை கடற்கரையில் வெற்றி கொண்ட சாமர்த்தியம் இப்போது எங்கே போயிற்று தம்பி?” என்று கூறி எள்ளி நகையாடிக் கொண்டே இளங்குமரன் மேல் பாய்ந்தான் அந்த மல்லன். இளங்குமரன் கன்னத்தில் அறைந்ததுபோல் பதில் கூறினான் அந்த யவனத்தடியனுக்கு.

“சாமர்த்தியமெல்லாம் வேண்டிய மட்டும் பத்திரமாக இருக்கிறது அப்பனே! என்னிடம் இருக்கிற சாமர்த்தியத்தை வைத்துக் கொண்டு உனக்கு பதில் சொல்லலாம்; உன்னுடைய அப்பன் பாட்டனுக்கும் பதில் சொல்லலாம். சந்தேகமிருந்தால், தனித் தனியாக என்னோடு மல்லுக்கு வந்து பாருங்கடா. இதோ எதிரே கோவில் கொண்டிருக்கும் சதுக்கப் பூதத்தின் மேல் ஆணையிட்டுச் சொல்லுகிறேன். உங்கள் ஒவ்வொருவருக்கும் எத்தனை கடைவாய்ப் பற்கள் என்று எண்ணி உதிர்த்துக் காட்டுவேன். ஆனால் ஐந்தாறு பேராகச் சேர்ந்து கட்சி கட்டிக் கொண்டு வந்து இப்படி முதுகுக்குப் பின்னால் நின்று கொண்டு கையைத் தட்டிவிடுகிற செயலைத் தமிழர்கள் வீரமென்று ஒப்புக் கொள்ள மாட்டார்கள். கோழைத்தனம் என்பதைவிடக் கேவலமான வார்த்தைகள் வேறொன்று இருந்தால் அதைத்தான் உங்கள் செயலுக்கு உரியதாகச் சொல்ல வேண்டும்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/67&oldid=1149302" இலிருந்து மீள்விக்கப்பட்டது